Header Ads



றிசாத் பதியுதீனின் அரசியலை எந்தக் கொம்பனாலும் அழித்தொழிக்க முடியாது - கல்முனை மாநகர உறுப்பினர் முபீத்


(அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.எம்.சலீம்)

எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் அரசியலை எந்தக் கொம்பனாலும் அழித்தொழிக்க முடியாது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் சூளுரைத்துள்ளார்.

றிசாத் பதியுதீன் மீதான அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையானது கிஷாலினியின் மரணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு, இரண்டாம் கட்ட அலையாக வீசிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 40ஆவது பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே உறுப்பினர் சி.எம்.முபீத் இவற்றைக் குறிப்பிட்டார்.

தனதுரையில் அவர் மேலும் கூறியதாவது;

கிஷாலினி எனும் பெண் றிசாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும்போது அவரது மூத்த சகோதரியின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை என்பவற்றை சமர்ப்பித்து 18 வயது நிரம்பியவர் எனக்காட்டப்பட்டதாலேயே அவர் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட அப்பெண்மணி கடந்த 08 மாதங்களாக அங்கு கடமையாற்றி வந்துள்ளார். அதற்காக மாதாந்த சம்பளம் ஒழுங்காக கொடுக்கப்பட்டு, அதனை அவர் தனது வீட்டிற்கு அனுப்பி வந்திருக்கிறார். இதனால் அந்தக் குடும்பம் சந்தோசமாக வாழ்ந்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 03ஆம் திகதி ஏற்பட்ட தீச்சம்பவம் காரணமாக காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது 15ஆம் திகதி மரணமடைந்து விட்டார். இவரது பிரேத பரிசோதனை முடிவாக தற்கொலை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆனால் கிஷாலினியின் நன்றிகெட்ட தாய் அபாண்டமாக பொய்களைக் கூறி வருகிறார். இந்த மரணத்தை வைத்து, மலையக அரசியல்வாதிகள் சிலர் இனவாதத்தைக் கிளப்பி, றிசாத் பதியுதீனையும் அவரது குடும்பத்தினரையும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து, அரசியல் இலாபத்திற்காக அவர்கள் இதனை அரங்கேற்றி வருகின்றனர். மலையக மக்களின் வாக்குகளை காலத்திற்குக்காலம் சூறையாடி வருகின்ற இந்த அரசியல்வாதிகள் தமது கடமையை சரியாக செய்திருந்தால், கிஷாலினி போன்ற பெண்களும் பொதுவாக மலையக மக்களும் இந்தளவு பொருளாதார கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டு, துன்பமடைய நேரிட்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் கிஷாலினியின் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை நாம் வரவேற்கின்றோம். அவரது மரணத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாமும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆனால் இந்த நோக்கத்தை விட்டு விட்டு, சம்பவம் நடந்த இடம் எமது தலைவர், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு என்பதற்காக அவரது குடும்பத்தை சந்திக்கு இழுத்து, பழிவாங்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகப்பெரும் அநியாயமாகும். றிசாத் பதியுதீனின் அரசியலுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்பதற்காக அரச தரப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றும் ஒரு நாடகமே இது என்பதை எல்லோரும் அறிவோம்.

ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிசாத் பதியுதீன், துன்ப துயரங்களுடன் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், தன்னை வீட்டுக்காவலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். சிலவேளை அதற்கு சாதகமான முடிவுகள் வந்து விடலாம் என்பதால், அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காக அவரது வீட்டுப் பணிப்பெண் கிஷாலினியின் விவகாரம் பூதாகரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மை ஒருநாள் வெளிக்கும். அப்போது புரியும் யார் குற்றவாளிகள், யார் இதன் பின்னணியில் இருந்தார்கள் என்பதெல்லாம் வெளிவரும். நாட்டு மக்கள் இது விடயத்தில் தெளிவாகவே இருக்கின்றனர். அவருக்கு ஆதரவு பெருகி வருகின்றது. றிசாத் பதியுதீனின் அரசியலை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அவர் மீண்டெழுவார் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கிறேன்- என்றும் மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.