Header Ads



நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)


இன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை (17) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திங்கட்கிழமையிலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுலில் இருக்கும்.

இந்த கால எல்லையில் மேல் மாகாணத்தில் COVID தடுப்பூசியை பெறுவதற்காக பயணிப்பதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பயண அனுமதி வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுள் அடங்குபவை

சுகாதார சேவைகள்

பொலிஸார்

முப்படையினர்

அரச அதிகாரிகளின் அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்கள்

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம்

குடும்பத்தில் நெருங்கிய உறுப்பினரின் மரண சடங்குகள்

வௌிநாட்டுப் பயணம்

வௌிநாட்டிலிருந்து தாயகம் திருப்புபவர்களுக்கான அனுமதி

இறக்குமதி, ஏற்றுமதி சேவைகள்

இந்த அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் அனுமதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாகவே வழங்கப்படும்.

இது தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்ததாவது,

இன்று முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஊரடங்கு சட்டம் அல்ல, வாகன போக்குவரத்திற்கே தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட மாட்டாது. மரக்கறி, உணவு, இரவு நேர பயணிகள் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட முடியும். அதனைத் தவிர வேறு நபர்கள் செல்ல முடியாது. அத்தியாவசிய நுகர்வோர் சேவைகளை வழங்குவோர் மாத்திரமே வாடகை வாகனங்களை பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ளலாம். மக்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அனைத்து மாகாணங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். எனினும், கர்ப்பிணித் தாய்மார், இருதய நோயாளர்களுக்கு இது பொருந்தாது. அதனைத் தவிர வேறு தேவைகளுக்காக குறுக்கு வீதிகளில் பயணிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த நேரிடும்.


தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை நாளை (13) முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய அடையாள அட்டையை இலங்கையர்கள் வைத்திருப்பது அவசியம் எனவும் அவ்வாறில்லாவிட்டால் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன வலியுறுத்தினார்.

தேசிய அடையாள அட்டையில் 2, 4, 6, 8, 0 எனும் இரட்டை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் இரட்டை இலக்க தினத்திலும் 1, 3, 5, 7, 9 ஆகிய ஒற்றை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் ஒற்றை இலக்க தினத்திலும் வீடுகளில் இருந்து வௌியேற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கினார்.

எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளில் இருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை யாத்திரைகள், சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மரணம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன், மரண வீடுகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, திருமண நிகழ்வுகளுக்கு மே 31 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவுகளில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள தடைகள்

பொதுப்போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி

வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்

அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு

தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்

அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும்

செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை

சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி

பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி

பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன

சுப காரியங்களையும் வைபவங்களையும் மறு அறிவித்தல் வரை நடத்தக்கூடாது

வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வௌிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்.

No comments

Powered by Blogger.