Header Ads



20 ஆவது திருத்தம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரிஎல்ல, சபாநாயகருக்கு இன்று (19) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் கவனயீனமே இதற்கு காரணம் என தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி காலதாமதமாகியேனும் வௌியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.


இந்த சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அமரும் விதம் முற்றிலும் முரணானது என அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற சபை அமர்வுகளை நடத்துவதும் சட்டத்திற்கு முரணானது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கூறியுள்ளார்.


சட்டங்கள் வகுக்கப்படும் இடத்திலேயே சட்டம் மீறப்பட்டால் நாட்டிற்கு கிடைக்கும் முன்னுதாரணம் என்னவெனவும் அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இந்த வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தை பிற்போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரிஎல்ல, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த வாரம் பாராளுமன்ற அமர்வை நடாத்துமாறும் அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.