Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்க, கத்துக்குட்டிகள் களமிறக்கம் - ஹக்கீம் ஆவேசம்


(பர்வீன்)

இந்த சமூகத்தின் இருப்பையும், அடையாளத்தையும் பாதுகாக்கின்ற பாரிய பொறுப்பு எமக்கிருக்கின்றது, நமது உரிமைகளை பறிப்பதற்கும், அனுபவமுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்கவுமே இந்த கத்துக்குட்டிகளை களமிறக்கியுள்ளார்கள், இது சாத்தியமாகப்போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காாங்கிரசின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அங்குறணையில் வெள்ளிக்கிழமை (3)  பிரதேச இளைஞர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சக வேட்பாளர் எம்.எச்.ஏ.ஹலீமும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இளைஞர்களை வகைப்படுத்துவது எவ்வாறு என்பது சிக்கலான விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் உள்ளூராட்சி பெயர் பட்டியலில் இளைஞர்களுக்கு என்று 40 விகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது, அந்தக்காலத்தில் ஜனாதிபதி பிரேமதாச அவர்களால் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது அதன்போது எனது கட்சி சார்பாக நானும் அங்கு சென்றேன் அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஜனாதிபதி பிரேமதாச தலைமை தாங்கினார் அவர் இல்லாத பட்சத்தில் ஏ.சி .எஸ். ஹமீத் அந்த மாநாட்டுக்கு தலைமை தங்கினார். அந்த நேரத்தில் தான் ஏ.சி.எஸ் .ஹமீத் எனும் ஆளுமையின் ஊக்கத்தை கண்டேன். அப்போதுதான் இளைஞர்களை வகைப்படுத்தும் வயதெல்லை 35 என  தீர்மானிக்கப்பட்டது அது பாராளுமன்றத்திலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.சட்டவாக்கத்தில் ஏ.சி.எஸ். ஹமீத் மிக நுணுக்கமாக செயற்பட்டார் என்பதை நான் நேரடியாக கண்ணுற்றேன். பின்னர் இந்தவிடயம்  பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் நானும் எனது கருத்துக்களை முன்வைத்தேன். இதன்போது ஏ.சி.எஸ். ஹமீத் எனக்கு சில ஆலோசனைகளை முன்வைத்து அதனை பிரேரிக்குமாறு கூறினார். அது தான் உள்ளூராட்சி தேர்தலில் ஒருவருக்கான மூன்று விருப்பு வாக்குகளையும் போட்டியிடும் ஒரே வேட்பாளருக்கு வழங்க முடியும் என்ற பிரேரணையாகும். இதன் மூலம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை  உறுதிப்படுத்த  முடியும் என்று அவர் கருதினார்  ஈற்றில்  அந்த  மாநாட்டில் என்னால் அது  முன்மொழியப்பட்டு அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

 பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியில் வடக்கிலும், தெற்கிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம்  இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இந்த போராட்டத்தில் இளைஞர்களே களமிறங்கி இருந்தனர். எனவேதான் இளைஞர்களுக்கு அரசியல் அந்தஸ்த்தை ஜனநாயக ரீதியில் வழங்கும் வகையில் ஜனாதிதிபதியினால் இந்த 40 விகித ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

முதிர்ச்சியுள்ள தலைவராக ஏ.சி .எஸ் . ஹமீட் செயட்பட்டார். அவர் அமைதியாக இருந்து சாதித்த பல விடயங்களில் இதுவும் ஒன்று. விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் முன்னின்று செயற்பட்ட ஒருவர். இதனை அன்டன் பாலசிங்கம் என்னிடம் நேரில் அவர் சொன்னார். அவர் அதிகம் பேசமாட்டார் ஆனால் அடுத்தவர்களின் பேச்சுக்கும் அதிகம் காது கொடுப்பார் என்றும் அவர் சொன்னார். எனவே ஏ.சி.எஸ்.ஹமீத் போன்ற ஓர் அரசியல் ஞானியை உருவாக்கிய மண் இது . அரசியல் என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.அதனை இலகுவானது என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  
ஏ.சி.எஸ் ஹமீதின் இறுதிக்காலத்தில் அவருக்கும் தலைவர் அஷ்ரபுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவி வந்ததது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். ஏ.சி.எஸ்.ஹமீத்  மரணித்த வேளை  மையவாடியில் அடக்கம் செய்கின்ற போது தலைவர் அவரது கரங்களாலே ஜனாஸாவைப் பெற்று மண்ணறைக்குள்  வைப்பதை நாங்கள் நெகிழ்வோடு பார்த்தோம். அந்த அரசியல் ஞானி எம்மை விட்டு பிரிந்த அடுத்த வருடமே எமது தலைவரையும் நாம் இழந்தோம்.

முதிர்ச்சியுள்ள தலைவர்களை உருவாக்குவது என்றால் அந்த தலைமை புடம்போடப்படுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம். இளைஞர்களுக்கு துடிப்பும்இ ஆர்வமும் இருக்கின்றன.ஆனால் அவர்கள் நிதானமாக, பக்குவமாக அனுபவங்களை பெற்று முன்னேறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். மாற்றம் தேவை என்று சொல்பவர்கள் எந்த கட்டத்தில் மாற்றத்தை நாம் நாடுகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை என்பது அவர்களுக்கே முழு நிர்வாகத்தையும் வழங்கவேண்டும் என்ற வகையிலான சட்டவரைவொன்றை அவர்கள் முன் வைத்தார்கள். அதனை மக்கள் முன் வைப்பதற்கு முடியாமல் இருந்தது. வடகிழக்கில் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் அவர்களுக்கு இந்த நிர்வாகத்தில் என்ன பங்கு உள்ளது? இப்படி பல முரண்பாடுகள் காணப்பட்டன. இதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்க எம்மிடம் இந்த இடைக்கால நிர்வாக அலகினை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கேட்டார். அதில் உள்ள குறைபாடுகளை எமது அணி முன்வைத்தது. 
எனவே இடைக்கால நிர்வாக சபையினை புலிகளுக்கு வழங்க அன்றைய ரணில் விக்ரமசிங்கவின் அரசு இணங்கவில்லை. ஒருவேளை ரணில்  அதற்க்கு இணங்கி இருந்திருந்தால் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருப்பார். ஆனால் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க அனுமதிக்காத காரணத்தினால் அவர் தோல்வியடைந்தார்.

தற்போது ரணிலை சந்தைப்படுத்த முடியாதுள்ளது. அவரை மக்கள் அங்கீகரிக்க மறுக்கின்றனர். நாங்கள் விரும்பினாலும் அது நடைபெறுவதாக இல்லை. நாங்கள் இதனை அவரிடம் சொன்னோம். சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவருகின்ற ஆளுமை உள்ளவரே இனி தேவை. இதனையே சகல சிறுபான்மை கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள 90 விகிதமானவர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.

மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில் நடக்கின்ற இந்த தேர்தலில் நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் காலமல்ல இது. ஏனென்றால் ஆட்சியாளர்களின் மிகமோசமான நடவடிக்கைகளையும் . இந்த நாட்டின் ஆட்சியாளர்களை விமர்ச்சிக்கின்ற திராணியும் அந்தஸ்த்தும் எமக்கு இருக்கவேண்டும். பிழைகளை சுட்டிக்காட்ட திறன் இல்லாவிட்டால் பாராளுமன்றம் செல்வதில் என்ன பயனுள்ளது.

தற்போதைய பிரதமர் ஜனநாயகத்திற்கு எதிராக 52 நாள் பிரதமராக இருந்த போது எங்களிடம் பேசினார். அவரிடம் தெளிவாக சொன்னேன் இது அரசியல் அமைப்புக்கு மாற்றமான செயல். இன்னும் ஒருவருடம் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு இருக்கின்றது அதுவரை பொறுத்திருக்கலாம் தானே என்றேன். தேசியமட்டத்தில் பிரச்சினைகளை கையாளும் போது, ஒரு தேசிய கட்சியின் தலைவராக, ஒரு சமூகத்தின் அரசியல் தலைமையான எம்மால் சோரம்போக முடியாது.

அந்த 52 நாள் அரசியல் அமைப்பை கேள்விக்குட்படுத்துகின்ற ஆட்சியின் போது ஜனநாயத்தை பாதுகாக்கும் பொருட்டு நாம் நீதிமன்றத்திற்கு சென்றதோடு மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் மக்களை தெளிவு படுத்தும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து நடத்தினோம். அதன் போது சஜித் பிரேமதாசாவுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவு எமக்கு  தெளிவாக விளங்கியது. அது ரணிலுக்கும் தெரியும்இ மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அந்த மாற்றத்தை நோக்கிய பயணமே ஐக்கிய மக்கள் சக்தியாகும்.

அரசியல்வாதி என்ற வகையில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். என்மீதும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி விடயத்தில் இந்த அக்குறணை பிரதேசத்தில் அதிகமான வேலைத்திட்டங்கள் என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குன்றும் குழியுமாக இருந்த பல பாதைகள் கார்பட் வீதிகளாவும்இ கொன்கிரீட் வீதிகளாகவும் உருமாறியுள்ளன. எங்களுக்கு அதிகாரம் இருக்கின்ற காலகட்டங்களில் எம்மாலான அபிவிருத்திப்பணிகள் நிறையவே நடந்துள்ளன.

வந்த அபிவிருத்திகளை தடுத்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது கதை சொல்லி திரிகின்றவர்கள்தான் அவர்கள். இந்த அக்குறணை பிரதேசத்திற்க்கான நாலுமாடிகளை கொண்ட சந்தக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ரூபாய்களை எனது அமைச்சின் மூலம் ஒதுக்கினேன். நகர அபிவிருத்தி சபையின் அங்கீகாரத்துடன் அவற்றை நிர்மாணிக்க அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் வெவ்வேறு வகையில் இரகசியமாக இடம்பெற்றன. இருக்கின்ற கட்டிடத்தை உடைக்க அனுமதிக்க முடியாது என்று மத்தியமாக மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க விடமிருந்து எமது அமைச்சுக்கு கடிதம் வந்தது நான் அவருடன் இதுபற்றி பேசியபோது அந்த கட்டிடம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே பழைய கட்டிடத்தை உடைக்க அனுமதிக்க முடியாது  என்றார். இது யாருடைய வேலையாக இருக்குமென்று  இப்போதுதான் புரிகிறது.

உங்களுக்கு தெரியும் திகன கலவரத்தின் போது நாங்கள் களத்தில் நின்றோம் ஓடி ஒளியவில்லை. இங்குள்ளவர்கள் அநேகமானவர்கள் அதனை நன்றாக அறிவார்கள். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு CCTV  (சீ.சீ.ரீவி) ஆதாரங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்டினோம். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு படையினரின் முன்னாலேயே சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. பின்னர் இரகசிய போலீசாரின் உதவியுடன் இந்த கலவரத்தோடு சம்பந்தப்பட்ட 150 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கொந்தராத்து காரர்கள் என்பது விசாரணைகளின் போது தெளிவாகியது. 


இங்கு இப்போது களமிறங்கி எங்களை விமர்சிக்கின்றவர்களும் கொந்தராத்துக்கு களம் இறக்கப்பட்டுள்ளவர்கள்தான். நானும் முன்னாள் அமைச்சர் ஹலீமும் இணைந்து இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிரடியாக களத்தில் இறங்கி செயற்படக்கூடிய குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில் இணைந்த அமைச்சரவை பத்திரமொன்றைக்கூட தயாரித்து வைத்திருந்தோம். அனர்த்த முகாமைத்துவ வரைபொன்றை தயாரித்திருந்தோம்இ இதுதொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, புத்திஜீவிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை என பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இவை இலகுவில் நினைத்தவுடனே நடந்து முடிந்துவிடுகின்ற செயல்பாடுகள் அல்ல. கட்டம் கட்டமாக முன்னேற்றம் காணவேண்டிய செயற்பாடுகளாகும். இந்த திட்டங்களை அக்குறணை மக்களின் நலன்கருதியே நாம் முன்னெடுத்தோம்.

இந்த ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுக்க முனைகின்ற இவர்கள் ஒருவிடயத்தை நினைவில் கொள்ளவேண்டும். இந்த கொரோனாவின் போது அட்டிலுகம, அக்குறணை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் மாத்திரம் கடுமையான சட்டம் கடைபிடிக்கப்பட்டன. உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியும், உலகிலுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் இஸ்லாமிய முறைப்படி ஜனாஸாக்களை அடக்கஞ் செய்ய அனுமதி வழங்கியும் நமக்கு அந்த உரிமையை வழங்க மறுத்த அரசுக்கு கூலிப்படையாக இருக்கின்ற கூட்டம்தான் இது. இவர்களுக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு வாக்கும் இந்த சமூகத்திற்கு இடம்பெற்ற அநியாயங்கள், அவலங்கள், அவமானங்கள் போன்றவற்றை மறந்து அடிமைத்தனமாக வழங்கப்படுகின்ற வாக்காகவே கணிக்க முடியும். இவர்கள் அரசின் கொந்தராத்துக்காரர்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இளைஞர்கள் நிதானமாக சித்தித்து செயற்படவேண்டிய கட்டமிது.

நமது உரிமைகளை பறிப்பதற்கும், அனுபவமுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்கவுமே இந்த கத்துக்குட்டிகளை களமிறக்கியுள்ளார்கள், இது சாத்தியமாகப்போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கின்ற சன்மானத்திக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள். 

இந்தவிடயத்தில் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டும். தேவையான சந்தர்ப்பத்தில் இந்த சமூகத்தின் இருப்புக்கு குந்தகம் ஏற்படுகின்றபோது அவற்றை நாங்கள் நேருக்குநேர் முகம்கொடுத்து எமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளோம். ரத்ன தேரரின் உண்ணாவிரதம், ஞானசார தேரரின் கொதிப்பான பேச்சு என்பன பற்றி   உங்களுக்கு தெரியும். அதன்போது நாங்கள் கூட்டாக இராஜினாமா செய்ததன்மூலம் இந்த சமூகத்திற்கெதிரான திட்டமிடப்பட்ட பாரிய வன்முறையை நிறுத்த முடிந்தது. கடந்த காலங்களில் எங்களின் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் தற்போது எம்மோடு இணைந்து எமது வெற்றிக்காக செயலாற்றும்போது இந்த கத்துக்குட்டிகள் தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார்.

3 comments:

  1. கவுண்டமணி போல் மேடைகளில் கோமாளித் தனமாகச் செயற்படும் உம்மைப் போன்ற காட் போட் வீர தலைவரைத் தோற்கடிக்க கத்துக்குட்டிகளே போதுமானதாகும்.

    ReplyDelete
  2. அக்குறனையில் ஹமீட்
    அம்பாறையில் அஷ்ரப்
    தான் 0
    சொல்ல ஏதுமில்லை

    ReplyDelete
  3. Very clever very good actor
    Very good leader for our society.
    May god bless you.your good cheating Akurana people

    ReplyDelete

Powered by Blogger.