Header Ads



மைத்திரியும் - ரணிலும் மக்களுக்கு பணிசெய்யாமல், பனிப்போரில் மட்டுமே ஈடுபட்டனர் - பிரதமர்

மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களுடன் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டால் மாத்திரமே அரச நிர்வாகத்தை முறையாக முன்னெடுக்க முடியும் என்று ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மக்களுக்கு பணிசெய்யாமல் இருவரும் பனிப்போரில் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகவும் அவர் சாடினார்.

கேகாலை - எட்டியந்தோட்டை பிரதேசத்திற்கு இன்றைய தினம் -16- விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மின்சார கட்டணம் தொடர்பில் பொது மக்கள் எதிர் கொண்ட சிக்கல் நிலைக்கு தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு உரிய மின்சார கட்டணங்களை செலுத்த நிவாரண அடிப்படையில் சலுகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் துயரங்கள் குறித்து எதிர் தரப்பினர் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியினர் எமக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லாமல் அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கிறது.

சர்வதேச அரசியல் மற்றும் உலக நடப்புகளை கருத்திற் கொண்ட தூர நோக்கு கொள்கையுடன் கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணையை கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

அரசாங்கத்தை நிதி நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில் எதிர்தரப்பினர் அப்பிரேரணைக்கு அப்போது ஆதரவு வழங்கவில்லை. ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரச நிர்வாகத்திற்கு தேவையான நிதி தற்போது ஒதுக்கிக் கொள்ளப்படுகிறது.

2005ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி பணிகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை.

தேவையற்ற விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டன. தற்போது நெருக்கடியான நிலையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்காவிடின் மீண்டும் பலவீனமான அரச நிர்வாகம் தோற்றம் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.