Header Ads



நான்தான் யாழ்ப்பாணம் ஹதீஜா கல்லூரி பேசுறேன் - எனது சுயசரிதையை உருக்கமாக வாசியுங்கள்

ஒரு காலத்தில் எங்கட சோனகதெருவில் பாடசாலைக்கு ஆண் பெண் இருபாலாரும் செல்வதில்லை.  காலனித்துவக் காரர்கள் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மனமாற்றம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் எமது மூதாதையருக்கு. அதிலும்  உண்மையும் நியாயமும் உள்ளது. 1890 இக்குப் பிறகுதான் முஸ்லிம்களும் கல்வி கற்கச் சென்றனர். அப்போது கில்னர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி போன்றவற்றுக்குத் தான் மாணவர்கள் சென்றனர். பெண்கள் செல்லவில்லை. பிறகு 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில் தான் முஸ்லிம் பெண்களும்  அதிகளவில் பாடசாலைகளுக்குச் செல்லத் தொடங்கினர்.  

அதற்கு முன்னர் பெண் பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்தே கல்வி போதிக்கப் பட்டது. அதற்குப்  பிறகு திண்ணைப் பாடசாலைகளும் இடம்பெற்றன. அதிகமானவர்கள் வீட்டில் வைத்து பெற்றோராலேயே கல்வி போதிக்கப் பட்டனர். அம்மாணவர்களின் எழுது கோல் விரலாக இருந்தது. கொப்பி  நிலமாக இருந்தது. ஆம் நிலத்தில் எழுதிய ஏராளமானவர்கள் கற்றனர். பிறகு சிலேட் வந்தது. 

அது இருக்கட்டும். பெண்களும் பாடசாலை செல்லும் காலகட்டத்தில் மஸ்ர உத்தீன் பாடசாலையிலேயே பெண்கள் ஏழாம் ஆண்டுவரை படித்தனர். பிறகு மன் ப உல் உலூமிலும்  முஹம்மதியா பாடசாலையிலும் பெண்கள் கல்வி கற்றனர். 7 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பிய பெண்பிள்ளைகள் அதிகளவில் வைத்தீஸ்வரா கல்லூரிக்குச் சென்றனர். ஒரு சிலர் வேறு பாடசாலைகளுக்கும் சென்றனர். 

முஸ்லிம் பெண்களுக்கென்று தனியான ஒரு பாடசாலை ஆரம்பிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கை கொழும்பு, கல்முனை, கம்பளை போன்ற ஊர்களில் 1900 களிலேயே முன்வைக்கப் பட்டு அங்கெல்லாம் பெண்களுக்கான தனியான கல்லூரிகள் உருவாக்கப் பட்டிருந்தன. ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்கள் இருந்தும் பெண்கள் பாடசாலை ஆரம்பிக்க 50 ஆண்டுகளுக்கு மேல் சென்றது. இக்காலத்தில் ஏட்டிக்கு போட்டியாக சில விடயங்கள் செய்யப் பட்டனவே அல்லாமல் ஆக்கபூர்வமான செயல் பாடான பெண்கள் பாடசாலைக்கு முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை. 

தனியான பெண்கள் பாடசாலை உருவாக்கும் கோரிக்கை வீ.எம்.எம்.எஸ். அப்துல் காதர் ஹாஜியாரின் செவிகளுக்குச் சென்றபோது அவர் தனி மனிதனாக போராடினார். மானிப்பாய் வீதியிலுள்ள அவரது மனைவியின் வீடாகிய சல்மா மன்சிலை 11.4.1960 அன்று ஹதீஜா பெண்கள் கல்லூரி ஆரம்பிக்க  வாடகை இன்றி இலவசமாக வழங்கினார். அப்போது அதிபராக ஜெஸீமா முஹம்மத் லெப்பை அவர்கள் பொறுப்பேற்றார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் பெண்களுக்கு ஹதீஜா கல்லூரியில் தனியாக கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.  

1963 இல்  ஒஸ்மானியா ஆரம்பிக்கப் பட்டு  ஆண்பிள்ளைகள்  முஹம்மதியாவில் இருந்து ஒஸ்மானியாவுக்கு மாற்றப் பட்டனர். அக்காலத்தில் சல்மா மன்சிலில் இயங்கிய ஹதீஜா கல்லூரி முஹம்மதியா கல்லூரி இயங்கிய கட்டிடத்துக்கு மாற்றப் பட்டு அதற்கு ஹதீஜா பெண்கள் கல்லூரி எனப் பெயரிடப் பட்டது. பிறகு அது சின்ன ஹதீஜா என அழைக்கப் பட்டது. இந்தப் பாடசாலையில் அதிபராக ஜெஸீமா டீச்சர்,  மற்றும் 19.3.1963 முதல் 30.4.1969 வரை எஸ்.ஏ.சி. மர்ஹூமா  டீச்சர் அவர்களும்  பிறகு 1976 வரை லைலா முஹிதீன்  அவர்கள் கடமையாற்றினார். 

1979.1.16 அன்று ஹாதி அபூபக்கர் வீதியில் ஹதீஜா கல்லூரி புதிய மாடிக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது.  அதிபராக ஜெஸீமா  (1979 முதல் 1982 வரை) அவர்களும் பிறகு ரஸீனா ( அப்துல் ரஹீம்) (1982 முதல் )அவர்களும்   அதிபராகக் கடமையாற்றினர். இக்காலத்தில் 30 ஆசிரியர்களும் 575 மாணவிகளும் எனது கல்லூரியில் கல்வி கற்றனர். இறுதியாக எனது கல்லூரியின் அதிபராக எம்.ஐ. அனீஸா அவர்கள் இருந்தார்கள். 

நான்  சமூகத்தின் ஒரு  கண்ணாக இருந்த போதிலும் மக்களினதும் செல்வந்தர்களினதும் அக்கறை என் மீது படாமலே நான் இருந்தேன். இதனால் கசப்பான ஒரு பக்கத்தை சொல்லியே ஆக வேண்டும். அதாவது  எனது காணியில்  மாணவிகள் டொய்லட் செல்வதற்கான வசதி இல்லாமல் இருந்தது என்பதும் பிள்ளைகள் இயற்கைக் கடன்களுக்காக வெளியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வந்தார்கள் என்பதும் கசப்பான உண்மை. 

தற்போது நான் 200 இக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளதால் என்நெரமும் இழுத்து மூடப் படக் கூடிய அபாயமும் உள்ளது.  யாழ்ப்பாண செல்வந்தர்கள் தான் இதைப் பற்றி சிந்திக்கிறார்கள் இல்லை என்றால் என்னிடம் கல்விகற்ற ஆயிரக் கணக்கான மாணவிகள் இன்று திருமணம் முடித்து வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கூட என்னைப் பற்றி சிந்திப்பதில்லை. என்னுடைய நெஞ்சில் ஓடி ஆடி விளையாடிப் படித்த 600 இக்கும் மேற்பட்டோர் இங்கிலாந்திலும், பிரான்ஸிலும், சுவிஸிலும், கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசதியாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களுக்கு கல்வி போதித்த கல்வித்தாயாகிய நான் நிர்க்கதியாக கிடக்கின்றேன். என்னிடம் நிறையவே இடம் இருக்கின்றது. ஆனால் கல்வி கற்க மாணவர்கள் போதாமல் உள்ளது. எனது பாடசாலையைச் சுற்றி தமிழர்கள் தான் இருக்கிறார்கள். நான் பெண் பிள்ளைகளை வைத்துள்ளதால் அச்சத்துடனே வாழ்கின்றேன். 

ஏன் எனது முன்னாள் மாணவிச் செல்வங்களே ! உங்களால் முடியாதா என்னை மீண்டும் அதிக மாணவிகள் பலத்துடன் பாதுகாப்பாண சூழ்நிலையில் செயற்பட வைக்க!

ஒன்று சேருங்கள். எனது பழைய மாணவிகள் எல்லொரும் ஒன்றூ சேருங்கள். உங்களால் முடிந்ததை எனக்காக கொடுங்கள். என்னைச் சுற்றி  மாணவ மாணவிகளைக் கொண்ட  15 முஸ்லிம் குடும்பங்களை குடியேற்றுங்கள். காணிகளை வாங்குங்கள். அதில் குறைந்த செலவில் தொடர் வீடுகளை அமைத்து அவற்றில் குடும்பங்களைக் கொண்டுவந்து குடியேற்றுங்கள். மேலும் சில குடும்பங்களை தூரமாக இருப்பினும் பொம்மைவெளி யில் குடியேற்றுங்கள். 

எனது மாணவிகள் என்னைப் பாதுகாத்தார்கள் என நான் பெருமை அடைவேன். 
நான் பெறாத எனது பிள்ளைகள் எனது பாடசாலைக்கு கூடிய மாணவிகளை வழங்கி பழைய பொலிவுடன் நான் செயற்பட  வழிவகுத்தார்கள் என்று மனமகிழ்வேன்.
எனது சமூகம் என்னை தம் கண்களில் ஒன்றாக மதித்தார்கள் என்று நான் வரலாறு எழுதுவேன்.
காலங்கள் போகின்றது. அடுத்த தலைமுறைக்கு இந்தப் பணியில் அக்கறையிருக்காது. அதுவரை நான் செயற்பட நிலமை  அனுமதிக்குமா தெரியாது. 

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி ஹதீஜா அம்மையாரின் பெயரை எனக்குச் சூட்டினார்கள். அவர் முஹ்மின்களின் தாய். நானோ யாழ் முஸ்லிம் மாணவிகளின் தாய்.

எனவே எனக்காக முன்வாருங்கள். என்னைப் பாதுகாருங்கள்.உங்களின் முயற்சிகள் சதகதுல் ஜாரியாவாக என்றென்றும் நிலைத்து நாளை மறுமையிலும் உங்களை பாதுகாத்து மேலான சுவனத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். 

இப்படிக்கு
உங்கள் கல்வித் தாய்
ஹதீஜா மஹாவித்தியாலயம்
யாழ்ப்பாணம்  

4 comments:

  1. Nice article with blackouts. Why the family that gave the property for the present small Khadija and the managers who spent time and energy r not mentioned ? Sadakathullah And his FIL were the founders of this place ??

    ReplyDelete
  2. யாழ் வாழ் முஸ்லிம்களே! எமது ஹதிஜா உம்மா தேம்பித் தேம்பி அழும் குரல் உங்களுக்கு கேட்கின்றதா? இதற்கு உங்கள் பதில் என்ன? இதனை இப்படியே விட்டு விடுவதா?

    ReplyDelete
  3. The artlcle has focused on the current issue, not who donated lands, money etc. I read the article carefully and noted that who donated the land to big hadeeja is not mentioned in any form. Brother I hope you alone can put up a house like your forefathers did.

    ReplyDelete
  4. If Anybody coming forward to take initiatives to put up few houses, resettlement efforts, and educational advancement effort , we are ready to work with your project. We will donate certain amount also.

    ReplyDelete

Powered by Blogger.