Header Ads



கவலையளிக்கும் விடயம், ஆனால் கட்டுப்படுத்துவோம் – இராணுவத் தளபதி கருத்து

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் 57 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டமை கவலை தரும் விடயம் ஆனால் நாங்கள் அதனை விரைவில் கட்டுப்படுத்துவோம் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இதன் போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட 56 பேருக்கும் ஒரு பெண் ஆலோசகருக்கும் கொவிட் 19 பாதிப்புள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரவல் முகாமிற்குள்ளே காணப்படுவதால் அங்கு பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஏற்கனவே 57 பேரை அடையாளம் கண்டுள்ளோம் ஏனைய பலர் அடையாளம் காணப்படலாம் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு முகாமுக்குள் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டமை கவலை தரும் விடயம் நாங்கள் இதனை கையாளமுயல்கின்றோம் இதனை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தொற்றுக்கு காரணமானவர் யார் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா நோயாளிகள் என இனம் காணப்பட்டவர்களில் சிலர் சுதுவெலவில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவதற்கு முன்னரே பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியிருந்தோம் அவ்வேளை அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள இராணுவதளபதி புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவேளையே அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு முகாமை சேர்ந்த ஆலோசகர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.