முஸ்லிம் உலகில் ஒற்றுமையில்லை - 100 ஆவது வயதிலும் வருத்தப்படும் மகாதீர் முகம்மது
கேள்வி: சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலிலும் பொதுச் சேவையிலும் ஈடுபட்டுள்ள நீங்கள், உங்கள் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். ஒரு உலகத் தலைவர் இந்த மைல்கல்லை எட்டுவது அரிதானது. ஜனநாயகம் குறித்து உங்கள் கருத்து என்ன?
மகாதீர்: ஜனநாயகம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. அது குறைபாடற்றது அல்ல. அதிலிருந்து நன்மையைப் பெற வேண்டுமானால், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
கேள்வி: நீங்கள் மலேசியப் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர். ஜனநாயகம் உங்களுக்குப் பல நன்மைகளை அளித்திருந்தாலும், பல கட்சி அமைப்புகள் குறித்து நீங்கள் ஏன் விமர்சனப் பார்வை கொண்டிருக்கிறீர்கள்?
மகாதீர்: ஒரு ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு கட்சிகள் போட்டியிடும்போது, ஒன்று அல்லது மற்றொன்று வெற்றி பெற்று ஒரு வலுவான அரசாங்கத்தை அமைக்கும். ஆனால், எல்லோரும் தலைவராக விரும்பும்போது, மக்கள் சிறிய குழுக்களாகப் பிரிந்து, அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மையை அடைய முடிவதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது.
கேள்வி: இன்றைய உலக அரசியல் யதார்த்தங்களில், காஸா மீதான இஸ்ரேலின் போர் குறித்த உங்கள் பார்வை என்ன? உலக சக்திகளின் நிலைப்பாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மகாதீர்: காஸா போன்ற ஒரு அநீதியைக் காணும்போது, அதைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் இங்கே, எம்மால் அதைத் தடுக்க முடியவில்லை, ஏனென்றால் இந்த இனப்படுகொலைக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா இனப்படுகொலையைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துகிறது. இது மேற்குலக நாகரிகத்தின் சரிவைக் காட்டுகிறது. நன்மை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் இழக்கப்பட்டு, நவீன நாகரிகம் தோல்வியடைந்து, நாம் பழமையான நிலைக்குத் திரும்பிவிட்டோம்.
கேள்வி: காஸா விடயத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மகாதீர்: இன்று, அமெரிக்கா மனித உரிமைகளைப் பற்றியோ, மனித உயிர்களைப் பற்றியோ கூட கவலைப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம். அது உலகின் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரி அல்ல. ஒரு உலகளாவிய தலைவராக அமெரிக்கா தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
கேள்வி: 1964 இல் மலேசிய நாடாளுமன்றத்தில் நுழைந்ததில் இருந்து, உங்கள் அரசியல் பயணம் குறித்து ஒரு முழுமையான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
மகாதீர்: மருத்துவம் படித்த பிறகு, 21 வயதில் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் (UMNO) சேர்ந்து அரசியலில் ஈடுபட்டேன். மலேசிய சுதந்திரத்திற்குப் பிறகு 1964 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தேன். 1981 இல் பிரதமரானேன், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் பணியாற்றினேன். எனது ஆட்சியில், மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் கலங்கரை விளக்கமாக மாறியது. 2018 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் பதவி விலகினேன். நான் பிரதமராக வருவேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் சரியான நேரத்தில் நான் அந்த இடத்தில் இருந்தேன்.
கேள்வி: உங்கள் நீண்ட ஆயுளின் இரகசியம் என்ன?
மகாதீர்: எனக்கு உண்மையில் தெரியாது. நீங்கள் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படாமல் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழலாம். நான் சில உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். எனது மனதையும், மூளையையும், வாசிப்பு, எழுதுதல், பேசுதல், உரையாடல், விவாதங்கள் மூலம் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறேன். உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியம் என்று நான் நம்புகிறேன். என் மனைவி சித்தி ஹஸ்மா எனது நீண்ட பயணத்தில் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்.
கேள்வி: மலேசியாவின் எதிர்காலம் மற்றும் முஸ்லிம் உலகம் குறித்து உங்கள் கருத்து என்ன?
மகாதீர்: மலேசியா தனது இலட்சியங்களை அடைய, அதன் பொருளாதாரம் சரியாக முகாமை செய்யப்பட வேண்டும். மேலும் நாடு “அரசியல் ரீதியாக ஸ்திரமானதான” இருக்க வேண்டும். நாட்டு மக்கள் நாட்டின் வெற்றிக்காக “தேவையான விடயங்களைச் செய்ய” கல்வி கற்க வேண்டும். மலேசியாவின் பல்வேறு சமூகத்தில், தலைவர்கள் “வெவ்வேறு இன மக்களுடன் பழகி அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
முஸ்லிம் உலகில் ஒற்றுமையின்மை குறித்து நான் வருத்தப்படுகிறேன், குறிப்பாக பலஸ்தீனம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் முஸ்லிம் நாடுகளிடம் ஒற்றுமையில்லை. OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) ஒருமித்த கருத்தை எட்டி செயல்பட முடியவில்லை. ஒரு நாடு எதிர்த்தால் கூட எதையும் செய்ய முடியாது. ஏன் இஸ்ரேல் விடயத்தில் கூட OIC இனால் ஒன்றுபட்டுச் செயற்பட முடியவில்லை.
– Vidivelli

Post a Comment