Header Ads



இன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன்? டேரன்சமி விளாசல்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவரின் பூட்ஸ் சுமார் 10 நிமிடங்கள் கழுத்தை நெரிக்க மரணமடைந்த கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் மேற்கிந்திய முன்னாள் கேப்டன் டேரன் சமியின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது.

உலகம் முழுதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு கண்டனங்களும் போராட்டங்களும் எழுச்சி பெற்றுள்ளன. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற கோஷங்கள் அமெரிக்கா நெடுகவும் கிளம்பி அது நிறவெறிக்கு எதிரான போராட்டமாக அங்கு கிளர்ந்தெழுந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் சங்கங்களுக்கு டேரன் சமி கோரிக்கை வைக்கையில் ஏன் இந்த மவுனம், இது மவுனத்துக்கான நேரமல்ல. நிறவெறி, சமூக அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காலம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர் ட்வீட்களில், “நிறவெறி அமெரிக்காவுடன் முடிவடைவதில்லை, இது உலகம் முழுதும் உள்ளது. என் சகோதரன் தொண்டையில் பூட்ஸ் கால் வீடியோவை பார்த்த பிறகு கிரிக்கெட் உலகம் இன்னும் ஏன் மவுனம் சாதிக்கிறது. ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை இன்னுமா உணரவில்லை?

எங்களுக்காக, கருப்பரினத்தவருக்காக நீங்கள் சமூக நீதி கேட்க மாட்டீர்களா? சமூக அநீதிகளுக்கு எதிராக பேச மாட்டீர்களா?

இது அமெரிக்கா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது தினப்படி நடக்கிறது. இப்போது மவுனத்துக்கான நேரமல்ல, நான் உங்கள் குரல்களை கேட்க விரும்புகிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.