June 26, 2020

நோவக் ஜோகோவிச்சின் கொரோனா அலட்சியம் - நமக்கான பாடம் என்ன?

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுக்குக் கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலைப் பொருட்படுத்தாமல் செர்பியா மற்றும் க்ரோடிசியாவில் டென்னிஸ் போட்டிகளை நடத்தியதே, நோவக் தொற்று பெற முக்கியக் காரணம். அந்தக் கண்காட்சி போட்டியில் சமூக விலகலும் பெரிதாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தத் தொடரில் விளையாடிய கிரிகர் டிமிட்ரோவ், போர்னா கோரிக் மற்றும் விக்டர் ட்ராய்கி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோகோவிச்சின் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'கொரோனா பரவலைப் பொருட்படுத்தாமல் கண்காட்சிப் போட்டிகளை நடத்தியதால்தான் இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போட்டியின்போது சுகாதார வழிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படவில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மேலும், நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே அதை வெளிப்படுத்தியும் வந்தார். 'டென்னிஸ் விளையாடப் பயணிக்கும்போது கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்று யாராலும் என்னை வற்புறுத்த முடியாது' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜோகோவிச்சின் மனநிலையில், உலகெங்கிலும் பலர் இருக்கிறார்கள். அரசு அறிவுறுத்தியுள்ள சுகாதார வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் செயல்படுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவது என்று வலம் வருகிறார்கள். விளைவு, தங்களுக்கும் பாதிப்பை வரவழைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் நோயைப் பரப்புகிறார்கள்.

ஜோகோவிச் போன்றவர்களுக்கு, சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அவசியம் பற்றி வலியுறுத்துகிறார், தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

"ஜோகோவிச் நடத்திய போட்டித் தொடரில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவே இல்லை. இந்த மாதிரியான நேரத்தில் போட்டிகளை நடத்துவது என்பது தவறு. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மீறி நடத்தப்பட்டதால்தான் கொரோனா தொற்று வீரர்களுக்கும் பரவிவிட்டது.

இப்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், விதிமுறைகள் சரியாகப் பின்பற்றபடவில்லை என்றால் ஊரடங்கின் பலன் வீணாகிவிடும். மேலும் ஊரடங்கு என்பதால், தனி மனித சுகாதார நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் கொள்ள வேண்டியதில்லை. ஊரடங்கின்போதும், வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் நாம் சுகாதார வழிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்
ஐந்தாவது லாக்டௌனில் இருக்கும் நாம், ஒவ்வொரு முறையும் லாக்டௌன் விதிமீறல்களைத் தவறாமல் செய்துவருகிறோம். 'லாக்டௌனில் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்போகிறேன்' என்று பைக்கில் சுற்றக் கிளம்புகிறோம். விடுமுறை, சுற்றுலாவுக்குக் கிளம்புவதுபோலக் கிளம்பிச் சென்று பேருந்து நிலையங்களை ஸ்தம்பிக்கவைக்கிறோம். காய்கறி, இறைச்சிக் கடைகளில் குவியும்போது கொரோனா என்ற ஒன்றையே மறந்து கூட்டத்தில் நீந்துகிறோம். மாஸ்க்கை மூக்குக்குக் கீழே இறக்கிவிட்டபடி நடமாடுகிறோம். சீனப் பெருஞ்சுவர்போல டாஸ்மாக் க்யூக்களில் நின்று சாதனை படைக்கிறோம். இவற்றின் விளைவுகளை எல்லாம் இப்போது எதிர்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை. இன்னொரு பக்கம் அச்சமூட்டுகின்றன தினம் தினம் நிகழும் கொரோனா மரணங்கள்.

'நமக்கெல்லாம் கொரோனா வராது' என்ற எண்ணத்திலும், 'வந்தா பாத்துக்கலாம்' என அலட்சியத்திலும், அசட்டு தைரியத்திலும் இருப்பவர்களுக்கு, கொரோனா தொற்று பற்றிய சில நினைவூட்டல்கள்.

* கோவிட்-19 வைரஸ் 60 வயதுக்கு மேல் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்பது பொய்யாகிக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஏற்பட்ட மரணங்களில், 50%க்கும் மேல் 35-64 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

* இதயநோய், சர்க்கரைநோய் என இணைநோயுற்றவர்களுக்கே (comorbidity) கொரோனா வைரஸ் தீவிர நோய்நிலை மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என்பதில்லை. தினம் தினம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்துவருபவர்களில் பலருக்கு வேறு எந்த இணை நோயும் இல்லை என்பதும், அவற்றில் பல இளவயது மரணங்களாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

* கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சீரான இடைவெளியில் அதிகரித்து, உச்சநிலைக்குச் சென்று, பின்னர் தணிவதே பாதுகாப்பானது. ஆனால் மக்கள் கொரோனா தடுப்புக்குக் கைகொடுக்கும் விதமாகத் தனிமனிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத பட்சத்தில், நோய் சீரற்ற வேகத்தில் சென்று, மிக விரைவில் உச்சத்தை எட்டும். அப்படி எட்டும்போது இறப்பு விகிதமும் மிக அதிகமாக இருக்கும்.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?
* நவம்பர் வரை கொரோனாவின் தீவிரம் இருக்கும் என்பதும், பின்னரே படிப்படியாகக் குறையும் என்பதும் மருத்துவ நிபுணர்களின் கணிப்பு. அப்படித் தணிந்த பின்னரும், கோவிட்-19 வைரஸ் உலகை விட்டே விடைபெறும்வரையிலும் மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று வலியுறுத்தப்படுகிறது. எனில், நோய் உச்சம் அடைந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் எந்தளவுக்கு சுய ஒழுக்கத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை உணர வேண்டும்.

எனவே, 'கொரோனா வராது, வந்தா பார்த்துக்கலாம்' என்ற மனநிலை இருந்தவர்கள் எல்லாம், இதற்குப் பிறகாவது சுதாரித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அப்படி செய்யும்பட்சத்தில் இனி வரும் நாள்களிலாவது கொரோனா தொற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இனி, லாக்டௌனில் இருப்பவர்கள் அவசியமன்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழல் என்றால், மாஸ்க் கட்டாயம். எங்கும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம். ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிட்டைஸரை எல்லாம் தேவைப்படும் சூழலில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அரசால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தவே முடியும். அதைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது.

கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?
நம் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை இப்போதைக்குத் தள்ளிவைக்க வேண்டும். கொரோனாவுக்குப் பின்னர் நடத்தத் திட்டமிடப்படும்போதும்கூட, பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தும் தரப்பினர் என அனைவரின் பாதுகாப்பும் முக்கியம். கொரோனா இரண்டாவது அலையைத் தவிர்க்க, கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதன்மையாக வலியுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு, ஒவ்வொரு குடிமகனும் சுகாதார வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஏற்கெனவே கொரோனா பாதிப்பு நம் கைமீறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இதற்குப் பிறகும் மக்கள் அலட்சியத்தைக் கைவிடாவிட்டால், இந்தியா அதற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். 'நம் நாட்டில் இறப்பு விகிதம் 1% தான்' என்பவர்கள், 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில் அந்த 1% எத்துணைப் பெரிய இழப்பு, எத்தனை உயிர்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'நமக்கு வராது', 'நம் வீட்டுக்கு வராது' என்ற உத்தரவாதம் இன்றைய சூழ்நிலையில் யாருக்குமே இல்லை'' - எச்சரித்து முடித்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

0 கருத்துரைகள்:

Post a comment