Header Ads



கட்டுவாபிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சாட்சி


- அததெரன -

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட்டை சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் சிலர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) சாட்சியமளித்தனர். 

குண்டுதாரி தங்கியிருந்தாக விசாரணையின் போது கண்டறியப்பட்ட வீட்டின் உரிமையாளர் சாட்சியம் வழங்கையில், வீட்டை கூலிக்கு வழங்குவதாக தான் இணையத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டதாகவும் அதனை பார்வையிட்டு கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி வீட்டை வாடகைக்கு பெற முகமது அசாம் முகமது முபாரக் மற்றும் அவருடன் மற்றொரு நபர் வருகை தந்தாக கூறினார். 

எனினும் அதே வருடம் பெப்ரவரி 3 ஆம் திகதி ஒரு சட்டத்தரணிக்கு வீடு வாடகைக்கு விடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் கூறினார். 

அப்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் நீதிபதிகள் வீட்டை வாடகைக்கு எடுக்க வந்த நபரிடம் வீட்டில் எத்தனை பேர் தங்க போகிறார்கள் என விசாரித்தீர்களா என வினவினர். 

அதற்கமைய நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறிய குழந்தைகள் வசிக்கவுள்ளதாக அவர்கள் தன்னிடம் கூறியதாக வீட்டின் உரிமையாளர் கூறினார். 

அவர்கள், தாங்கள் ஹெந்தல, வத்தளை பகுதியில் உள்ள ஒரு சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்வதாக தெரிவித்தாகவும் எதிர்காலத்தில் நீர்கொழும்பில் மற்றொரு தொழிற்சாலையை கட்ட உள்ளதால் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க முடிவு செய்ததாகவும் கூறியதாக அவர் தெரிவித்தார். 

வீட்டை வாடகைக்கு கொடுக்க ஏதேனும் முற்பணத்தை பெற்றீர்களா? என நீதிபதிகள் வினவியதற்கு மாதம் ஒன்றுக்கு 43,000 படி ஆறு மாதங்களுக்கு 258,000 ரூபாவையும் அதற்கு மேலதிகமாக இரண்டு மாத வாடகையும் செலுத்தியதாக அவர் கூறினார். 

கடந்த வருடம் ஏப்ரல் 5 ஆம் திகதி அவர்கள் மக்காவுக்குப் புறப்பட்டதாகக் கூறிய வீட்டிலிருந்து சென்றதாகவும் மறுபடியும் அவர்கள் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னதான இரவு வேளையில் வீட்டுக்கு வருகைதந்து அன்றைய இரவு மின்விளக்குகளை ஒளிரவிட்டிருந்ததை அயலவர்கள் கண்டதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
அதன் பின்னர் குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் அயலவர்களும் சாட்சியம் வழங்கினர்.
இதன்போது சாட்சியம் அளித்த ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சில பொருட்கள் பை ஒன்றில் இடப்பட்டு இருந்தனை தனது மகள் கண்டதாக கூறினார். 

முகமது முபாரக் பல முறை தண்ணீர் எடுக்க தனது வீட்டிற்கு வந்ததாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகளிடம் பட்டாசுகளை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்வது பற்றி விசாரித்ததாகவும் அந்த சாட்சியாளர் கூறினார்.

No comments

Powered by Blogger.