Header Ads



ரமலான் மாதத்தில் கிடைத்த, அய்ன் ஜாலூத் வெற்றி


- Zainul Abideen -

ஆசிய கண்டத்தையே நடுங்கச் செய்த செங்கிஸ்கானின் மங்கோலியப் படைகள் செங்கிஸ் மறைவிற்கு பிறகு அவனது பேரன் ஹூலாகு தலைமையில் உலகை திடுக்கிட செய்யும் பயங்கரங்களை நிகழ்த்தி கொண்டிருந்தன.

இஸ்லாமிய கிலாபத்தின் தலைமை பீடமான பாக்தாத் மங்கோலியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு உலகின் தலை சிறந்த அறிவு,விஞ்ஞான தலைநகர் மங்கோலியர்களால் சூறையாடப்பட்டது. முஸ்லிம்களின் பல நூற்றாண்டு கால அறிவுசார் பொக்கிஷங்கள் அழித்தொழிக்கப்பட்டன. எதிரிகளை எதிர் கொள்ள முடியாத கலீபாவும் கொல்லப்பட்டார்.

முஸ்லிம் உலகமே திடுக்கத்தில் ஆழ்ந்து விட்டது. வெற்றி கொள்ள முடியாதவர்கள் மங்கோலியர்கள் என்ற ஆழ்ந்த மன சோம்பலுக்கு முஸ்லிம்கள் உள்ளாகி விட்ட நேரத்தில்தான் புயலென புறப்பட்டார் எகிப்தை ஆண்டு கொண்டிருந்த மம்லூக்கிய சுல்தான் ஸைபுத்தீன் குத்ஸ் ( ரஹ்)

பாக்தாத்,டமாஸ்கஸை வெற்றி கொண்டு ஜார்ஜிய,ஆர்மீனிய கூட்டுப் படைகள், அய்யூபிய அமீர்கள் சிலரின் துணைப் படைகளோடு எகிப்து நோக்கி புறப்பட்டு வந்த மங்கோலிய படைகளை ரமலான் மாதம் நோன்பு 15 ல் 1260 ம் ஆண்டு ஜெரூஸலத்துக்கு அருகே அய்ன் ஜாலூத்தில் சந்தித்தது முஸ்லிம் படை.

தனது பெரும் படைகளை மலைக் குன்றுகளில் ஒளிய செய்து விட்டு அணி வகுத்து நின்று கொண்டிருந்த மங்கோலிய படைகளை சந்தித்தது மம்லூக்கிய தளபதி பெய்பர் தலைமையிலான சிறியளவிலான அதிரடிப் படை.

பெய்பர் திடீர் தாக்குதல்கள் மூலம் சிற்சில சேதாரங்களை உண்டாக்கி மங்கோலிய படைகளுக்கு போக்கு காட்டி கொண்டிருந்தார். ஆவேசமடைந்த மங்கோலிய தளபதி கித்புகா முன்னேறி தாக்க திடீரென போர்க்களத்திலிருந்து வேகமாக பின் வாங்கி சென்றது பெய்பரின் அணி, எதிரிகளை விடக் கூடாது என்ற முனைப்பில் மிக வேகமாக அபாயத்தை உணராமல் பின்னால் துரத்தி சென்றது மங்கோலிய படை.

அப்போது திடீரென மலைக்குன்றுகளிலிருந்து வெளிப்பட்ட குத்ஸ் படையினர் மங்கோலிய படைகளை சுற்றி வளைத்தனர். வலைக்குள் சிக்கிய சிறுத்தையாய் இடது புற முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டனர் மங்கோலியர்கள்.

வ இஸ்லாமா ( என் இஸ்லாமே) என்றபடி தலைக் கவசத்தை எறிந்து விட்டு மங்கோலிய படைகளை நோக்கி பாய்ந்தார் சுல்தான் குத்ஸ். முஸ்லிம் படையினர் உணர்ச்சி உத்வேகத்தோடு மங்கோலியர்களை நிர்மூலமாக்கினர். புயலில் சிக்கிய சிறு படகாய் சிதைந்து போனது மங்கோலியர் படை.

வரலாற்று வெற்றி பெற்றது முஸ்லிம்களின் அணி இந்த போரில் மங்கோலியர்கள் வெற்றி பெற்றிருந்தால் மக்கா,மதீனா போன்ற புனித நகரங்களும், எகிப்து தொடங்கி வட ஆப்ரிக்கா முழுவதும் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கியிருக்கும். இந்த தோல்விக்கு பிறகு மங்கோலியர்கள் மத்திய கிழக்கில் நுழைய முடியவில்லை என்பது மட்டுமல்ல வெல்ல முடியாத படை என்ற மாயத் தோற்றமும் உடைத்தெறியப்பட்டது.

இந்த மாபெரும் வெற்றி முஸ்லிம்கள் உணவும், தண்ணீரும் அருந்தாமல் நோன்பிருந்த ரமலான் மாதத்தில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம். முஸ்லிம்கள் பெரும் வெற்றிகளை பெற்றது ரமலான் நோன்பிருந்த நிலையில்தான்..

பத்ருப் போர் (Battle Of Badr) – 2H 
வாதி அல் குரா (Wadi al-Qura)– 6H 
மக்கா வெற்றி (Fath Makkah) – 8H 
ஸ்பெயின் வெற்றி (Al-Andalus) – 92H 
ஜெரூசலம் வெற்றி (Jerusalem) – 582H 
அய்ன் ஜாலூத் (Ain Jalut) (Defeating Mongols) – 658H என நீண்ட பட்டியல் இருக்கிறது.

நோன்பின் மாதம் வணக்க,வழிபாடுகளுக்கும்,ஏழைகளுக்கு தர்மம் செய்வதற்கு மட்டுமல்ல அநீதிக்கு எதிரான போராட்டத்துக்கும் உரியதே.

No comments

Powered by Blogger.