Header Ads



கவனம் செலுத்தாவிட்டால் பல வருடங்களுக்கு, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொருளாதாரம் அரசாங்கத்தின் சில கொள்கை ரீதியான தீர்மானங்களின் காரணமாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தேசிய உற்பத்தி குறித்து அரசாங்கம் முறையாக கவனம் செலுத்தாவிட்டால் இன்னும் பல வருடங்களுக்கு பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய உற்பத்தி , தனியார்துறை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி பொருளாதாரம் என்பன பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாணயத்தாள்களை அச்சிடுவதால் பாதகமான பிரதிபலனே கிடைக்கப் பெறும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்யிருக்கிறார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை -17- காணொளியொன்றின் மூலம் விசேட அறிவித்தலை விடுத்து இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் முழு உலகத்தின் பொருளாதாரத்திற்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கணிப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் உலக பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு மூன்று சதவீதமாகக் காணப்படும்.

இலங்கையின் நிலவரமும் இதுவேயாகும். எமது ஆடை உற்பத்தியினால் கிடைக்கப்பெறும் வருமானம் நூற்றுக்கு 60 வீதமாக வீழ்ச்சியடையும். சுற்றுலாத்துறையினால் வருமானம் கிடைக்கப் பெறாது. வெளிநாட்டு வருமானம் நூற்றுக்கு 20 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அதனால் அந்நிய செலாவணி முழுமையாக வீழ்ச்சியடையும்.

மறுபுறம் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்துள்ளது. அதற்கமைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சில கொள்கை  தீர்மானங்களினால் அரசாங்கத்தின் வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் இறக்குமதி பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இறக்குமதி மூலப்பொருட்களை தங்கியிருப்பவையாகும்.

இவற்றுக்கு மத்தியில் சுமார் 200 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகக் காணப்படும் போது இவ்வாறு நாணத்தாள்கள் அச்சிடப்படுவது பாதகமான பிரதிபலனையே ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் துறைகள் ஸ்திரமற்று போயுள்ளன. குறைந்தளவு 5000 இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளனர். எனவே இவ்வாறான நிலைமையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பாதகம் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.

பொருளாதாரத்தை பலப்படுத்தக் கூடிய பல தேசிய உற்பத்தி துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இவ்வாறான துறைகளை பாதுகாப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த துறைகளைப் பாதுகாப்பதற்காக பெருமளவில் நிதியை ஒதுக்கிட்டுள்ளன. நூற்றுக்கு 10 வீத நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் நூற்றுக்கு 2 வீதம் என்ற குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். அதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

இவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இன்னும் பல வருடங்களுக்கு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது. எனவே தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பொருளாதார சவாலுக்கு முகங்கொடுப்பதற்காகவும் சரியான மதிப்பீட்டினை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.