Header Ads



இத்தாலியில் விருந்து நடத்திய இலங்கையர்கள் - பல குற்றச்சாட்டுக்களின் கீழ் பெருந்தொகை அபராதம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இத்தாலி முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஃபிரேன்சி நகரில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நடத்திய 11 இலங்கையர்களுக்கு பொலிஸார் பெருந்தொகை யூரோ அபராதம் விதித்துள்ளனர்.

இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வரும் இலங்கையர்களுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 இலங்கையர்களும் தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீட்டில் கடந்த 19ஆம் திகதி இரவு இந்த விருந்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அயல் வீட்டில் உள்ளவர்கள் இத்தாலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் சந்தேகநபர்கள் செய்த குற்றங்களுக்கு அமைய 400 யூரோ முதல் 3 ஆயிரம் யூரோ வரை அபராதம் விதித்துள்ளனர்.

இந்த நபர்கள் வேறு வீடுகளை சேர்ந்த நபர்களை தமது வீட்டுக்கு அழைத்து வந்தமை, வேறு வீடுகளுக்கு சென்றமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, ஒரு இடத்தில் பலர் கூடியமை, இரவு நேரத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் சத்தமிட்டமை, விருந்து நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தற்போது முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கல் சட்டத்திற்கு அமைய பிறந்த நாள் விழா உட்பட விருந்துகளை நடத்துவது இப்படியான சந்தர்ப்பத்தில் இறந்தவர்கள் மற்றும் முழு நாட்டுக்கும் செய்யும் அவமதிப்பு என கருதப்படுகிறது.

சந்தேகநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மொத்த அபராத தொகை குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என்ற போதிலும் இது மிகப் பெரிய அபராத தொகை என இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.