Header Ads



அல்லாஹ்வுக்கும், எமக்கும் மட்டுமே தெரிந்த ஏதோ, ஒரு நற்செயலை தொடர்ந்து செய்வோம் - உண்மைச் சம்பவம்

அது பஜ்ருடைய நேரம். மஸ்ஜிதுந்நபவியில் கலீபா அபூபக்கர் (ரழி) சுபஹ் தொழுகையை தலைமைதாங்கி நடாத்திக் கொண்டிருக்கிறார். தொழுகை முடிந்ததும் பள்ளிவாயலிலிருந்து வெளியேறிய கலீபா தனது வீட்டிற்கு செல்லும் பாதைக்கு எதிரேயுள்ள பாதையில் இறங்கி வெகுதூரம் நடந்து செல்கிறார். 

இதை அவதானித்த உமருக்கு (ரழி) யோசனை; ஒவ்வொரு நாளும் சுபஹ் தொழுதகையோடு வீட்டுக்கு செல்லாமல் எங்கே போகிறார் அபூபக்கர்? ஒவ்வொருநாளும் போகிறாரே! இதை என்னவென்று பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் அவரை தூண்டுகிறது. 

ஒருநாள் அபூபக்கரை இரகசியமாக பின்தொடர்ந்து செல்வதாக தீர்மானிக்கிறார். வழக்கம்போல கலீபா தொழுகை முடிந்ததும் பாதையில் இறங்கி நடக்கத்தொடங்குறார். உமரும் அபூபக்கர் அவரை காணாதவகையில் அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். நீண்டதூர நடைப்பயணம். பாலைவனத்தை ஊடறுத்து மதீனாவின் கடைக்கோடிவரை நடந்து சென்ற கலீபா அபூபக்கர் அங்கிருந்த ஒரு குடிசையுள் நுழைகிறார். மோசமான நிலையிலிருந்த பழைய குடிசை அது.   

கலீபா வெளியேறி வரும்வரை உமர்(ரழி) அங்கே மறைந்து காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட சில மணித்தியாலங்கள் காத்திருந்தும் அபூபக்கர் குடிசையிலிருந்து வெளியேறியதாக தெரியவில்லை.

சூரிய வெளிச்சம் பரவி ளுஹாவுடைய நேரமாகிய பின்னர்தான் குடிசையிலிருந்து வெளியேறி மதீனாவை நோக்கி புறப்படுகிறார்.

அபூபக்கர் பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்த உமர்(ரழி) குடிசையை நெருங்கி கதவைத் தட்டுகிறார்.ஒரு பெண் கதவைத் திறக்கிறார். வயது முதிர்ந்த, கண்பார்வையற்ற மிக பலவீனமான ஒரு பெண். சிறுவர்கள் சிலர் அங்குமிங்கும் ஒடித்திரிகிறார்கள்.

உமர் (ரழி) அந்த மூதாட்டிக்கு ஸலாம் சொல்லிவிட்டு “உங்களுடைய நிலமைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா” என்று கேட்கிறார்.

அதற்கு அந்த மூதாட்டி “நான் ஒரு பார்வையற்ற பெண், என்னைப் பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை. என்னோடு சில அநாதைகளும் இருக்கிறார்கள்.” என்று பதிலளிக்கிறார்.

உமர்(ரழி) கேட்கிறார்கள் “ ஒவ்வொருநாளும் வந்து உங்களை தரிசித்துவிட்டு போகிறாரே அவர் யார்?”

“எனக்கு அவர் யாரென்று தெரியாது. அவர் ஒருபோதும் என்னிடம் தன்னுடைய பெயரை சொல்லியதேயில்லை.” என்று அந்த மூதாட்டி பதிலளிக்கிறார்.

உமர் தொடர்ந்து கேட்கிறார் “நல்லது, அவர் இங்கு என்ன செய்கிறார்?”

அதற்கு “அல்லாஹ் அவருக்கு நிரப்பமான கூலியை வழங்க வேண்டும்” என்று பிரார்த்தவாறே சொல்கிறார். “அவர் ஒவ்வொருநாள் காலையிலும் வந்து, என்னுடைய வீட்டை சுத்தம் செய்கிறார்; எங்களுடைய ஆடைகளை கழுவுகிறார்; கோதுமையை அரைத்து ரொட்டியை தயார் செய்கிறார்; எங்களுக்கான உணவை சமைத்து வைக்கிறார். இவையெல்லாவற்றையும் செய்து முடித்தபின் என்னிடம் எதுவும் கூறாமலேயே வெளியேறிவிடுவார்” என்று.

உமர்(ரழி) ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள் “ஒவ்வொருநாளும் இதை செய்துவருகிறாரா?”

“ஒவ்வொருநாளும்.... அல்லாஹ் அவருக்கு அருள்பாளிக்க வேண்டும்.” என்கிறார் அந்த மூதாட்டி.

இதற்காக அவருக்கு கூலி ஏதாவது கொடுக்கிறீர்களா? என்று உமர்(ரழி) கேட்டபோது, “எதுவுமே நாம் கொடுப்பதில்லை” என்று அவர் பதிலளிக்கிறார்.

உமர்(ரழி) அவர்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

“அபூபக்கரே! உமக்கு பின்னால் வருகின்ற எல்லா கலீபாக்களையும் நீங்கள் களைப்படையச் செய்துவிட்டீர்களே”என்று கூறி அழுகிறார்கள்.

ஒரு தேசத்தின் தலைவர்; சுவர்க்கத்திற்கு நன்மாராயனம் செய்யப்பட்ட ஒருவர்; நன்மைகள்மீது தீராத ஆசை கொண்ட பணிவுமிக்க உன்னத மனிதர்.

மறைவாக அல்லாஹ்வுக்கும் எமக்கும் மட்டுமே தெரிந்த ஏதாவதொரு நற்செயலை தொடர்ந்து செய்துவருவோம்.

Ramees Abdul Salam

No comments

Powered by Blogger.