Header Ads



உசைன் காதர் பாவா எனும், கண்ணியமான பக்கீர் காலமானர்

- யூ.கே. காலித்தீன் -

சாய்ந்தமருது 12ல் வசித்து வந்த உசைன் காதர் பாபா இன்று (10:04:2020) அதிகாலை தனது 78வது  வயதில் இறைவசமானார் 

பக்கீர் பண்பாடு..

இஸ்லாமிய பண்பாட்டில் பக்கீர்களுக்கு என்று ஒரு தனித்துவமும் , பாரம்பரிய வரலாறும் உண்டு அந்தவகையில் காதர்பாவா அவர்கள் பரம்பரையான பக்கீர் வம்சத்தில் வந்தவர், மட்டுமல்ல அவரது மனைவியும் அத்த பரம்பரையைச் சேர்ந்தவரே ,  அதனால் பக்கீர் வம்சத்தில் பிறந்த இப்பிரதேசத்தில் வாழ்ந்து பணி புரிந்த  சிரேஷ்ட பக்கீர் என்ற பெருமை காதர் பாவா அவர்களையே சாரும்.

வாழ்க்கை முறை 

காதர் பாவா அவர்கள் பக்கீர் பதவி படி நிலைகளில் பல உயர்  ஆன்மீக படித்தரங்களை வகித்தவர்  முரீதுகளிடமும், ஏனைய வர்களிடமும், மிகவும் கண்ணியமாக பழகும் அதே வேளை அவரது வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது,  தான் பெற்ற ஆன்மீக அறிவையும் , திறமையையும் விரும்பி வருபவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் அத்தோடு தான் மனதாற ஏற்ற கொள்கையின்பால் விருப்பத்துடன் வாழ்ந்ததுடன் தன்னை  ஒரு சூபித்துவம் சார் மனிதராகவே கட்டமைத்துக் கொண்டார்.

சமூகப் பங்களிப்பு

இலங்கையில் பக்கீர்கள் தமது ராத்திபுகளிலும், இசை நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் அத்தனை இடங்களுக்கும் தனது வாழ்க்கையில் சென்று சேவையாற்றியவர், தப்தர் ஜீலானி, போர்வை, கதிர்காமம், பொத்துவில் கொடிமரத்துப்பள்ளி, கல்முனை கடற்கரைப்பள்ளி ஷாஹூல் ஹமீத் ஆண்டகை தர்ஹா கொடியேற்றம், கொட்டியாக்கும்பறை,  கல்முனை தாறுஸ்ஸபா மகாம், சாய்ந்தமருது ஹாஜா மகாம் பள்ளி, அக்பர் பள்ளிவாசல், மாளிகைக்காடு, வெள்ளைக்குட்டி ஆலிம் கொடியேற்றம் , அக்கரைப்பற்று மகாம்கள்,  போன்ற பல இடங்களுக்கும் சென்று பக்கீர் பணி புரிந்தவர், 

அத்தோடு உள்ளூர், மற்றும் தேசிய மட்டத்தில் நிகழும் அரச, தனியார் நிகழ்வுகளில் கலந்து வரவேற்பு றபான் நிகழ்வுகளையும், அழகிய பாடல்களையும் பாடி சிறப்புறச் செய்தவர்,  ரமழான் நோன்புகாலங்களில் ஸஹர் விஷேட விடியல் அழைப்புக்களுக்காக பல வருடங்கள் சேவை புரிந்தவர்  இன்னும் பிரதேச செயலக மட்டத்திலான, புதிய பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதற்கான ஒரு அமைப்பையும் செயற்படுத்தி புதிய கலையார்வமிக்கவர்களை ஊக்குவித்தார் 

விருதுகளும், பாராட்டுக்களும் 

சாதாரணமாக பக்கீர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும், விரும்புவதில்லை, ஆனாலும் அரச, கலாசார நிகழ்வுகளுக்கு தேசிய, பிரதேச அளவில் நிலவும் முஸ்லிம் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக,  அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கின்றனர். அந்தவகையில் தேசிய ரீதியில் , கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட "கலாபூஷணம்", விருதையும், பிரதேச கலாசார பிரிவால் வழங்கப்படும் பல விருதுகளையும் பெற்றிருந்ததுடன்  கடந்த வருடத்திற்கான கலாசாரத் திணைக்களத்தின் " சுவதம்" விருதும் இவருக்கே வழங்கப் பட்டிருந்த்து,

உசைன் காதர் பாவா அவர்களோடு இடம்பெற்ற சில சந்திப்புக்களில் அவரிடம் சமூகம் கற்க வேண்டிய பல விடயங்கள்  நிறைந்தும், மறைந்தும்  கிடந்ததை அவதானிக்க முடிந்தது, ஆனாலும் இவ்வளவு திறமையான, பக்குவமான ஒரு  எளிய பக்கீரை நாம் எந்தளவு பயன்படுத்திக் கொண்டோம் என்பதில் சமூகம்சார் பல கேள்விகளும் உள்ளன, 

இப்பிரதேசத்தில் "இறையருட்கவி" இலங்க மஸ்த்தான் அவர்களுக்குப் பின் தன்னையும் , தான் சார் தரீக்காவையும் மதித்து அதன் படியே தனது அன்றாட வாழ்க்கையை பொறுமையாகவும், பக்குவமாகவும், வாழ்ந்த பெருமை காதர் பாவாவையே சாரும் எனலாம், 

இறுதியாக, 

தனி மனிதராக, ஒரு சமூகத்தின் கலைப்பண்பாட்டின் குறியீடாக வாழ்ந்த காதர்பாவா அவர்களின் இழப்பு மிகவும் பெறுமதியானது, அந்தவகையில் எமக்குள்ளே மறைந்து வாழ்ந்த  ஒரு அனுபவமிக்க  பக்குவமான ஒரு மூத்த கலைஞரை  இன்று  நாம்  இழந்திருக்கின்றோம், இது இனி வருங்காலங்களிலும் ஈடு செய்ய முடியாத இடை வெளியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை,

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (10) தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எமக்குள் ஒருவராக, இருந்து மறைந்து வாழ்ந்த, மர்ஹூம் உசைன் காதர் பாவா அவர்களின்
மறுமை வாழ்வு சிறப்பாக அமைய  எனது பிரார்த்தனைகள் செய்வோம்

1 comment:

  1. May Allah bless him and shower his mercy on him,these people are truly preserved our Islamic culture in this land without them we will be culturally very poor

    ReplyDelete

Powered by Blogger.