April 06, 2020

கொரோனாவுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்

ஒரே அறையில் 8 பேருக்கு கொரோனா.

அப்படி ஒரு நோய் அவர்களை அண்டி இருப்பது அவர்களில் யாருக்கும் தெரியாது.

எட்டு பேரும் ஒரு அரபு நாட்டில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர்கள்..

அதில் ஒருவருக்கு லேசான காய்ச்சல் வருகிறது உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சொல்கிறார்..

பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்க பட்டிருப்பதை உறுதி செய்கிறார்கள்..

உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க படுகிறது, அந்த அறையில் உள்ள மற்ற ஏழு பேரும் அழைத்து வரப்படுகிறார்கள்...

அந்த ஏழுபேருக்கும் கொரோனா இருப்பதை மருத்துவமனை உறுதி செய்கிறது..

உடனே தனிமைப்படுத்த படுகிறார்கள் மருத்துவம் பார்க்க படுகிறது அதோடு தனித்தனியே விசாரணை துவங்குகிறது..

எங்கு சென்றீர்கள் யார் யாரோடு தொடர்பில் இருந்தீர்கள் கடைசியாக யாரை சந்தித்தீர்கள் இந்தியாவிற்கு கடைசியாய் எப்போது போனீர்கள் என்கிற நோய்க்கான காரணத்தையும் இவர்களிடமிருந்து யாருக்கும் நோய் பரவி இருக்கிறதா என்கிற தகவலையும் திரட்டுவதற்கான அத்தனை விசாரனையும் நடைபெறுகிறது...

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் பரவ துவங்கிய நாள் முதல் எங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஊதியமும் போதிய உணவும் எங்கள் முதலாளி கொடுத்து விட்டார் எனவே நாங்கள் கொரோனாவிற்கு பயந்து வெளியே செல்லவே இல்லை என ஏழு பேர் ஒரே மாதிரி வாக்குமூலம் கொடுத்து விடுகின்றனர்..

ஒரேயொரு நாள் மட்டும் இதே நாட்டில் அருகில் உள்ள பகுதியில் பணிபுரியும் என் தங்கையை காண சென்றேன் என அதில் மீதமுள்ள ஒருவர் வாக்குமூலம் கொடுக்கிறார்...

உடனே இவரின் தங்கையும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க படுகிறார், தங்கைக்கும் கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்படுகிறது..

தங்கையிடம் விசாரணை நடத்துகிறார்கள் அவர் கடந்த மாதம் இத்தாலி சென்று வந்ததாக சொல்கிறார்...

அங்கிருந்து தொற்றி கொண்டு வந்து விட்டார் என்பதாக விசாரணையை முடிக்கிறார்கள்..

அந்த எட்டு பேரில் கொரோனாவால் முதலில் பாதித்தவன் தன்னால் தானே மற்ற ஏழு பேருக்கும் வந்தது, அவர்கள் முகத்தை எப்படி பார்ப்பேன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் என்னை என்ன நினைப்பார்கள் நம் முதலாளியிடம் நம்மை பற்றி இந்த ஏழு பேரும் புகார் செய்தால் நம் வேலையும் போய் விடுமே என கொரோனாவால் உடல் பாதித்தை விட குற்ற உணர்வில் மனம் நொந்து போய் புலம்ப ஆரம்பித்து விட்டான்..

மூன்றாவது நாள் அறை நண்பர்கள் ஏழு பேரும் இவர்கள் அறைக்கு கொரோனாவை இறக்குமதி செய்த சக அறைத் தோழனும் தனிமைப்படுத்த பட்ட கொரோனா நோயாளிகள் அறையில் சந்தித்து கொள்கிறார்கள்..

இவன் பதட்டத்தில் அந்த ஏழு பேரின் முகத்தை கூட பார்க்கவில்லை..

அவர்கள் இவன் அருகே வந்து பரிவோடு இவன் தோள் மீது கை வைத்து " நோயும் அதற்கான நிவாரணமும் இறைவனின் நாட்டத்தில் உள்ளது" வரும் முன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் வந்து விட்டால் மருத்துவம் பார்க்க வேண்டுமே தவிர யாரையும் காரணம் காட்டி பழி பாய்த்து கொண்டிருக்க கூடாது..

நீ விரும்பி திட்டமிட்டு இந்த நோயை தொற்றி கொள்ளவில்லை இதெல்லாம் எதிர்பாராமல் நடந்து விடுகிறது.. என நண்பனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்..

நண்பனின் தங்கையை நலம் விசாரிக்கிறார்கள்..

இவர்களின் வார்த்தையில் நைந்து போனான் நண்பன்..

எட்டு பேருமே நார்மல் வார்டில் இருக்கிறார்கள்.. எதிர்ப்பு சக்தி மிகுந்த இளைஞர்கள் என்பதால் விரைவில் குணமடைவார்கள் என மருத்துவர் சொல்லி இருக்கிறார்..

இது கடந்த வாரம் நடந்த சம்பவம்...

தங்கள் அறைக்கு கொரோனாவை கொண்டு வந்தவர் ஒரு கிறுத்துவ சகோதரன்..

மற்ற ஏழு பேரில் ஐந்து பேர் முஸ்லிம்கள் இரண்டு பேர் இந்து சகோதரர்கள்...

இங்கு கொரோனாவுக்கு யாரும் சிலுவை மாட்டி விடவில்லை.. 

மதச்சாயம் பூசவில்லை மனிதாபிமானம் பேசினார்கள்..

காரணம் இவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள், மனிதநேயம் கொண்ட மனிதர்கள்...

#கூத்தாநல்லூர்_ Mohamed Ali jinna

1 கருத்துரைகள்:

it's true, nothing else!

Post a Comment