Header Ads



அரசியலில் தன்னைத்தானே பலியிட்ட தலைவன், கட்சியையேனும் காப்பாரா?

முகமாலையில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. 2011இல் தொடங்கிய பணி, இன்னும் முடியவில்லை. இன்னும் நான்காண்டுகளுக்கு மேல் செல்லும் என்று சொல்கிறார் கண்ணி வெடி அகற்றும் பணிக்குப் பொறுப்பான Halo Trust நிறுவனத்தின் அதிகாரியொருவர். 

ஒரு காலம் (2009க்கு முன்பு) இந்தக் கண்ணி வெடிகளை நிலத்தில் புதைத்து வைத்தது விடுதலைப்புலிகளும் படையினருமே. இரண்டு தரப்பும் தங்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும் எதிராளிகளைத் தடுப்பதற்காகவும் இவற்றைப் புதைத்தனர். இப்பொழுது இவை மிகக் கஸ்ரப்பட்டு மீட்கப்படுகின்றன. இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால், இந்தக் கண்ணி வெடிகளைப் புதைத்தவர்களே இதில் சிக்கியிருக்கிறார்கள். இப்பொழுது அதை விதைத்தவர்களே மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் படையினர் இந்த மீட்புப் பணியிலீடுபடுகின்றனர். மறுபக்கத்தில் Halo Trust பணியாளர்கள். இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் வேறு யாருமல்ல, ஒரு காலம் புலிகளாக இருந்தவர்கள். 

காலம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று பார்த்தீர்களா? 

இதைப்போலத்தான் காலம் முழுவதும் எல்லோருக்கும் அரசியல் கண்ணி வெடிகளை வைத்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, இப்பொழுது தானே அந்த வெடியில் சிக்கியிருக்கிறார். 

விடுதலைப்புலிகளைப் பிரித்து பிரபாகரன் அணி வேறு, கருணா அணி வேறு என்றாக்கியவர். அணைத்துக் கெடுக்கும் உத்தியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அணைத்து, அதை விக்கினேஸ்வரன் அணி, ஐங்கரநேசன் அணி, சுரேஸ் அணி எனப் பல துண்டுகளாக உடைத்தவர்.  இதைப்போலச் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேன அணியைத் தன்னோடு எடுத்து அதையும் உடைத்து நொறுக்கியவர். இதற்குப் பிறகே சுதந்திரக் கட்சி – பொதுஜனப் பெரமுன (மொட்டுக் கட்சி) என இரண்டு அணிகளாகியது. ஒரு விதமாக ஜே.வி.பியையும் பலவீனமாக்கினார் ரணில். (இதைப்போல இந்த வேலையைச் செய்வதில் இன்னொரு மூன்றெழுத்துக்காரரும் உண்டு). 

இப்படியே வலுவான பல கோட்டைகளைப் பிரித்தாளும் நுட்பத்தினால் சிதறடிப்பதில் வல்லவர் என்று பேரெடுத்தவர் ரணில். அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர். ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் எவரையும் கையாளக் கூடிய சாணக்கியர் எனப் பல புகழாரங்களைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது எதையும் கையாள முடியாத இக்கட்டுக்குள்ளாகியிருக்கிறார். அதுவும் அவருடைய கட்சியையே கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளார். 

இருபத்தைந்தாண்டு காலத்துக்கும் மேலாக தன்னுடைய தலைமையின் கீழ் வைத்திருந்த கட்சி இன்று அவருடைய காலடியை விட்டுப் போய் விட்டது. அவருடைய முகத்துக்கு நேராகவே அவருடைய ஜூனியர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். சவால் விடுகிறார்கள். தலைமைக்கு நீங்கள் தகுதியானவர் அல்ல என்று பச்சையாகவே சொல்கிறார்கள். இன்னொரு அணியை (சஜித் குறூப்) உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து கொண்டு கல்லெறிகிறார்கள். 

ஆனாலும் ஐ.தே.கவை இவ்வளவு காலமும் பாதுகாத்து வந்தவர் ரணில் என்றே சொல்ல வேண்டும். நெருக்கடியான பல்வேறு சூழலில் எல்லாம் தன்னுடைய லிபரல் தோற்றத்தின் மூலமாகத் தாக்குப் பிடித்துக் கட்சியைக் காப்பாற்றியவர். உள்ளே விட்டுக் கொடுப்புகளற்றவராக இருந்தாலும் வெளித்தோற்றத்தில் தாராளவாதி, ஜனநாயகவாதி என்ற அடையாளத்தைக் காண்பித்தவர். இதன் மூலம் நெருக்கடிகளுக்கான கவசமாக இருந்தார். இதனால் ஐ.தே.க வெளியுலகில் பெருமதிப்பைப் பெற்றிருந்தது. உள் நாட்டிலும் சிறுபான்மைக் கட்சிகளின் நம்பிக்கையை ரணில் ஓரளவுக்குப் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியாது. இதற்கு முக்கியமான காரணம், குறித்த தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் வலது நிலைப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எது எப்படியோ ஒரு முக்கியமான தலைவராகவே கட்சிக்குள்ளும் வெளியிலும் ரணில் விளங்கினார். ஐ.தே.கவின் அடையாளமாக என்று கூடச் சொல்லலாம். 

ஆனால், இன்று அவ்வளவையும் ரணிலே இல்லாமலாக்கி விட்டார். இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி பகிரங்கமாகவே இரண்டு பிரிவுகளைக் கொண்டது என்றாகி விட்டது. ஒரு அணிக்கு சஜித் பிரேமதாசா தலைமை தாங்குகிறார். சஜித்தின் இந்த அணி தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளைத் தன்னுடைய கைக்குள் வைத்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு நெருக்கமாக இருந்தாலும் வழமையைப்போல அதை வெளிக்காட்டுவதற்குத் தயங்குகிறது. எனவே இதைக்கூட ரணிலினால் வென்றெடுக்க முடியவில்லை. 

சிங்கள உயர் குழாத்தைச் சேர்ந்தவர்களில் கரு ஜெயசூரியா போன்ற சிலர் மட்டும் ரணிலை விட்டு விலக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் ரணிலைக் குறித்து நம்பிக்கையும் இல்லை. திருப்தியும் இல்லை. ஆனாலும் அவர்களுடைய உயர் குழாச் சிந்தனை ரணிலை வெளிப்படையாக புறக்கணிக்கவோ எதிர்க்கவோ இடமளிக்கவில்லை. இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்துப் பார்க்கலாம். அல்லது ஏதாவது ஒரு சமரசத்தை ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் செய்து கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் இதற்கான வாய்ப்புகள் வரவரக் குறைவடைந்து கொண்டே செல்கிறது. 

இவ்வளவுக்குப் பின்னும் ஐ.தே.கவின் தலைவர் தானே என்று அவர் பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார் ரணில். என்னதான் செய்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை நடைமுறையில் ரணில் இழந்து விட்டார். இது இப்பொழுது உருவாகிய புதிய பிரச்சினை அல்ல. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்த விவகாரம். இந்தப் பத்தாண்டுகளிலும் அதற்குப் பரிகாரம் காணவில்லை ரணில். பதிலாக இழுத்தடித்தே வந்தார். உட் பிளவுகளுக்குத் தீர்வு காண்பதை விட்டு விட்டு வெளிச்சூழலின் நெருக்கடியைக் காண்பித்துக் காலத்தை இழுத்தடித்து வந்தார். ஏறக்குறைய இதே உத்தியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கடைப்பிடித்து வருகிறார். இதனால்தான் கூட்டமைப்பை விட்டுவிட்டுப் பலரும் வெளியேறிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதை ஒத்ததே ரணிலின் செயற்பாடுகளும். இதனால்தான் ஐ.தே.கவை விட்டுப் பலரும் வெளியேறிச் செல்ல வேண்டி வந்தது. 

ஆனால் முன்பு ரணிலுக்குத் தோதாக அல்லது வாய்ப்பாக உள் நாட்டு நிலைமைகள் இருந்தன. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக வெளியுலகத்தின் அனுசரணையை அவர் தொடர்ந்தும் தன்னுடைய கையில் வைத்திருந்தது இதற்கு உதவியது. 

ஆனாலும் இதனையெல்லாம் வைத்து அவர் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய தலைமையை வலுவாக்கிக் கொள்ளவில்லை. கால அவகாசம் தாராளமாக இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஐ.தே.கவையும் தன்னுடைய தலைமையையும் ஸ்திரமாக்கிக் கட்டி எழுப்பவில்லை. இதன் விளைவே இன்றைய நெருக்கடி. 

ஒன்றில் அவர் தலைமையை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். அல்லது தன்னுடைய தலைமையை வலுப்படுத்தியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யத் தவறியதால் இன்று மிகச் சிக்கலான ஒரு நிலைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ரணிலின் தலைமைத்துவம் முடிவுக்கு வந்து விட்டது. 

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ரணிலின் இழுத்தடிப்புகளும் சஜித்துக்குச் செய்த குழி பறிப்புகளும் ஐ.தே.கவுக்குத் தோல்வியைத் தந்தது. இந்தத் தோல்விக்கு ரணலின் தரப்பே பொறுப்பு என்று சஜித்தும் அவருடைய அணியும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது. 

சஜித்தின் குற்றச்சாட்டை மறுக்க முடியாதவாறு இறுதி வரையில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதற்கு ரணில் மறுத்தே வந்தார். அல்லது பின்னடித்தார். இதுவே பின்னாளில் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜீத்துக்குப் போய்ச் சேர்ந்தது. ஆனாலும் ஒரு சிறிய ஆறுதல் ரணிலுக்கிருந்தது.

அப்பொழுது கூட கட்சித் தலைவர் என்ற பொறுப்பை ரணில் வைத்திருந்தார். ரணிலின் இந்த மாதிரியான பிடிவாதக் குணமும் தோற்றுக் கொண்டிருந்த தந்திரோபாயமும் அவருடைய நெருங்கிய சகாக்களையே முகம் சுளிக்க வைத்தது. இதனால் தேவையற்ற வகையில் பங்காளிக்கட்சிகளின் எதிர்ப்பையும் சேகரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால்தான் பங்காளிக்கட்சிகள் இந்தத் தேர்தலில் ரணிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் முன்னாடியே சஜித்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியிருக்கின்றன. நீ செய்வதைச் செய்து பார், பார்க்கலாம் என்ற மாதிரி இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. சஜித்தை வெளிப்படையாக ஆதரிப்பது என்பதன் அர்த்தம், ரணிலை வெளிப்படையாக எதிர்ப்பதாகவே அர்த்தப்படும். 

ஆம், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே ரணிலுக்கு இப்பொழுது உள் வீட்டிலும் ஆட்களில்லை. வெளியிலும் நண்பர்களில்லை. இந்த நிலையில் சர்வதேச சக்திகளும் மெல்லத் தங்களுடைய கைகளை விடவே முயற்சிக்கும். ஆக, தானே வைத்த கண்ணியில் அவராகவே தன்னுடைய கால்களை வைத்திருக்கிறார். 

எத்தனையோ பேருக்கு அரசியற் கண்ணி வெடிகளை வைத்தவர் இன்று தானே ஒரு கண்ணியில் சிக்கியிருக்கிறார். பல கட்சிகளையும் மனிதர்களையும் பிரித்துக் கையாண்டவர், இன்று அவரே பிளவுண்டு சரிந்திருக்கிறார். அந்தப் பிரிவினைக்குப் பலியாகியுள்ளார். உச்சமாக அவருடைய கட்சியையே அவர் பிளவு படுத்தி விட்டார். 

இந்த நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று ரணில் சிந்திக்கக் கூடும். தனக்கான இன்னொரு வாய்ப்புக்காக அவருடைய மூளை வேலை செய்து கொண்டிருக்கலாம். 

இனி ஒரு புதிய சூழலை உருவாக்குவதென்பது மிகக் கடினமானது. ரணிலின் வயது, தற்போதுள்ள அரசியற் சூழல், அவரோடுள்ளவர்களின் ஆளுமை போன்றவற்றைக் கணக்கிற் கொண்டு பார்த்தால் ரணிலுக்கான பிரகாசமான எதிர்காலம் குறைவாகவே தென்படுகிறது. 

ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம் என்பார்கள். இதைப்பற்றிய சில விமர்சகர்களின் கருத்து இப்படி உள்ளது, “ரணிலைக் கண்டபடி மதிப்பிட முடியாது. அவர் ஒரு சிறிய இடைவெளிக்குள்ளால் ஊடுருவும் ஒளியைப் போன்றவர்” என.  

நண்பர்கள் சொல்வதைப் போல ரணில் விக்கிரமசிங்க ஏதாவது வித்தைகளைச் செய்து மறுபடியும் முன்னரங்குக்கு வர முடியும். அப்படி வந்தாலும் ரணிலினால் என்னதான் செய்ய ஏலும்? 

ஏறக்குறைய நாற்பதாண்டுகளாக அரசியலில் வலுவானதொரு நிலையிலிருந்தவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஐ.தே.க என்ற பெருங்கட்சியின் தலைவராகப் பதவி வகித்தவர். இலங்கையின் நெருக்கடிகளைத் தீர்த்து வைப்பதில் எத்தகைய பங்கினை வகித்திருக்கிறார்? குறைந்த பட்சம் தன்னுடைய இறுதிக்காலத்தில் தன்னுடைய கட்சியையாவது காப்பாற்றி வளர்த்தாரா? என்ற கேள்விகளைத்தான் வரலாறு எழுப்பப்போகிறது. 

ஆகவே தன்னைத்தானே பலியிட்டுக் கொண்டாரா இந்தத் தலைவர்? 

கருணாகரன்

No comments

Powered by Blogger.