Header Ads



மகாதீரின் ராஜினாமாவை, ஏற்றார் மன்னர்

மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் 129 எம்பிக்கள் இருப்பதாகவும், இது குறித்து மாமன்னரைச் சந்தித்து விவரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் தேசிய முன்னணியில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளையும் சேர்த்தால் தான் இந்த எண்ணிக்கை வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தான் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவு உள்ளது.

எனவே அந்த அடிப்படையில் மாமன்னர், அடுத்து ஆட்சி அமைக்குமாறு அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பு விடுக்கவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத், பதவிவிலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் மலேசிய அரசியல் திடீர் பரபரப்படைந்துள்ளது.

1 comment:

  1. பதவி ஆசை இல்லாத மலேசிய பிதாமகன். மாமனிதர். ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

Powered by Blogger.