January 02, 2020

இலங்கையில் முஸ்லிம்கள், பயமில்லாமல் வாழ வேண்டுமென்றால்...? "பதியுதீன் மஹ்மூத்"


– ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி –

ஒரு சமுதாய சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு எமக்கு கல்வி மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் நாம் சிந்திப்பதற்கு தேவையான அறிவு காணப்பட வேண்டும். அது இயல்பாக வருவதில்லை. 11ஆவது நூற்றாண்டு வரையில் முஸ்லிம்களே உலகை ஆட்சி செய்தார்கள். காரணம், அவர்கள் கல்வியறிவு படைத்தவர்களாகவும் கல்வியைத் தேடுபவர்களாகவும் காணப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் கல்வியை விட்டு விட்டு வெறும் துஆ மாத்திரமே என்ற கொள்கையின் பின்னால் செல்ல முற்பட்டார்கள். துஆவினால் மாத்திரம் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் துஆ மாத்திரம் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு தேவையானதை அவர்கள் செய்துகொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும்போது எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? எத்தனை பேர் செல்கிறார்கள்? யார் உணவைக் கொண்டு செல்வது? யார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது? என்று சகல விடயங்கள் தொடர்பாகவும் திட்டமிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சகல விடயங்களையும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவுமே மேற்கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முதற் தடவையாக மதீனாவுக்குச் சென்ற போது அங்கு எத்தனை முஸ்லிம்கள் உள்ளார்கள்? எத்தனை யூதர்கள் உள்ளார்கள்? கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? என்கின்ற விடயங்களைத் திரட்டினார்கள். இதனை நாம் உலகில் முதலாவது எழுதப்பட்ட புள்ளிவிபரம் (குtச்tடிண்tடிஞிண்) என்கிறோம். இவ்வாறு அறிவு ரீதியில் புள்ளிவிபரங்களைப் பெறுவது முக்கியம்.

முஸ்லிம் சமூகம் இன்று பின்னடைவதற்கான காரணம் உலகியல் கல்விக்கு முன்னுரிமை வழங்காமையாகும். நாம் விஞ்ஞானத்தையும் தர்க்கவியலையும் எவ்வளவு அதிகமாகப் படித்த போதிலும் இஸ்லாம் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கவே செய்கிறது. இப்படித்தான் இஸ்லாம் வளர்ந்தது. அல்ஜிப்ரா வின் தந்தை என வர்ணிக்கப்படும் முஹம்மது பின் மூஸா அல் குவாரிஸ்மி கணிதத் துறையிலும், வானவியலிலும், புவியியலிலும் சிறந்து விளங்கிய ஓர் அரேபியராகக் காணப்பட்டார். மருத்துவத் துறையிலும் அரேபியர்களே சிறந்து விளங்கினார்கள். ‘அல் கரோயின்’ என்னும் உலகில் மிகப் பழமையான பல்கலைகழகம் மொரோக்கோவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணால் உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய கால முஸ்லிம்களின் கல்வி நிலைமை பின்னடைந்து செல்கிறது. முதல் ஆயிரம் பல்கலைக்கழகங்களுள் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமாவது உள்ளடங்கியுள்ளதா என்பது கேள்விக்குறி. எம்மால் முழு உலகையும் மாற்ற முடியாது. ஆனால் நாம் வாழும் சூழலையும் சமுதாயத்தையும் எம்மால் மாற்ற முடியும் என்றால் அது மிகப் பெரும் செயற்பாடாக அமையும். முஸ்லிம்கள் இதுவரை ஆராய்ச்சி செய்துள்ள விடயங்களை விளங்கிக் கொள்வதற்கான அறிவு எம்மிடம் காணப்பட வேண்டும். அது எப்படி வரும்? கல்வியைக் கற்று ஆராய்ச்சி செய்தால்தான் அது பற்றிய சிந்தனை வரும். கல்வி கற்றவர்களால் மாத்திரமே இது பற்றிச் சிந்திக்க முடியும். எனவே நாம் கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். 1892 இல் கொழும்பு சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்ட போது மு.கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார் போன்றவர்களுக்கு சிலர் “ஆங்கிலக் கல்வியை போதிக்கப் போகின்றீர்கள். ஆங்கிலத்தை கற்றால் எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது மக்களுக்கு அவ்வளவு புரிதல் இருக்கவில்லை. இப்பின்ன ணியிலேயே சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்டது. டாக்டர் ஜாயா அவர்கள் சாஹிரா கல்லூரியை விரிவுபடுத்தி, இலங்கையிலுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாஹிரா கல்லூரிகளை நிறுவி, பெண்களுக்கும் சாஹிராக் கல்லூரியில் கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தார். முஸ்லிம்களில் இன்று பெண்களே பல்கலைக்கழக நுழைவில் 60 வீதமானவர்களாகக் காணப்படுகின்றனர். அன்று ஆரம்பிக்கப்பட்ட நல்ல முயற்சிக்கு இப்படித்தான் இடையூறு செய்தார்கள்.

எனவே நாம் இன்று கல்விக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். அதனோடு நாம் வாழும் சூழ்நிலையைத் திறம்பட நோக்க வேண்டும். அதற்கு வரலாற்றை கற்க வேண்டும். வரலாற்றைக் கற்பதற்கு நாம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். இணையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதர சமூகங்களுடன்          சேர்ந்து நடக்க வேண்டும். இந்த நிலைமைக்கு வந்தால் எம்மால் முன்னேறிச் செல்ல முடியும். முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. அதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு வரலாற்று நூலாக லோனா தேவராஜா எழுதிய நூல் காணப்படுகிறது. அதில் முஸ்லிம்கள் 11 நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் வந்தார்கள்? அப்போது மிகப் பெரிய ஹிஜ்ரத்துக்களோ, இடப்பெயர்களோ நிகழவில்லை. ஆரம்பத்தில் நான்கைந்து அரேபியர்களே இங்கு வருகை தந்திருப்பார்கள். அல்லது தமிழ் நாட்டிலிருந்து சிலர் வந்திருப்பார்கள். அவர்கள் இங்கு வந்து அடுத்த மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அடுத்த சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொண்டார்கள். இப்படித்தான் எமது சனத்தொகை பெருகி இன்று 2 மில்லியன் வரை அதிகரித்திருக்கிறது.

அன்று எமது மூதாதையர் ‘முஸ்லிம்களுடன் மட்டும் தான் கதைக்க வேண்டும். சிங்களவர்களுடன் கதைக்கக் கூடாது. அவர்களுடைய உணவுகளை உண்ணக்கூடாது’ என்கின்ற நிலைப்பாட்டில் இருந்திருந்தால் அவர்களை அந்த இடத்திலேயே சூழ்ந்து கொண்டு தாக்கியிருப்பார்கள். அவர்களது மறைவுடன் இஸ்லாமும் அழிந்து போயிருக்கும். எனவே நாம் இவை பற்றிச் சிந்திக்க வேண்டும். நாம் இந்நாட்டில் பல்லின சமூகத்துடன் வாழ்வதற்காக வேண்டியும், அவர்களை புரிந்துகொள்வதற்காக வேண்டியும், எமது மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதற்காக வேண்டியும் மொழியும் கல்வியறிவும் இன்றியமையாதவையாகும்.

“இஸ்லாத்தை நாம் உங்களுக்கு இலகுவாக்கியுள்ளோம்” என்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். பிள்ளைகளுக்கு நாம் இஸ்லாத்தைப் பற்றிய பயமுறுத்தும் படியான கருத்துக்களை வழங்கக் கூடாது. நடுநிலையான புரிதலையே கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் இஸ்லாத்தை பற்றிய சரியான விளக்கத்தை பெற்றுக்கொள்வார்கள். அல்குர்ஆனையும் ஹதீஸையும் ஆராந்து விளங்குவதற்குக் கூட ஒருவரிடம் அறிவு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எவராவது ஒருவர் கூறுவதையே நம்பவேண்டியேற்படும்.

எனது தந்தை சிங்கள மொழியில் என்னைப் படிக்க வைத்ததற்கு ஒரு காரணம் கூறுவார். டொக்டர் பதியுதீன் மஹ்மூத் 1960ஆம் தசாப்தத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் பயமில்லாமல் வாழ வேண்டுமென்றால் சிங்கள மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாக குறிப்பிட்ட கருத்தையே அவர் நினைவு கூறுவார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எனது தந்தையார் என்னை சிங்கள மொழியில் கற்க வைத்தார். சிங்களத் தில் கல்வி கற்றதனால் தான் இன்று என்னால் எனது சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடிந்துள்ளது. எனவே நாம் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். சமூகத்தில் சகல மக்களுடனும் சேர்ந்து வாழ வேண்டும். மொழிகளை கற்க வேண்டும். இவற்றை கொண்டு இஸ்லாத்திலுள்ள நல்ல விடயங்களை அடுத்தவர்களுக்கு எத்திவைக்க வேண்டும்.

மீள்பார்வை

2 கருத்துரைகள்:

Meel paarvai ok
Mr sabry ok his artical ok.
Not only educated.educated with islam practising our daily life.
Mr sabry today entire the country leaders and govt ministers well educated.but entire countrys very bad bad situation.entire leaders killing the innocent people.
Bribing puplics money doing maximum bad things.so only educated cant do Anything sir.
Education with islam can be Success.good luck for entire mankind.

யானையின் பூரண உருவத்தையும் அழகாக விளக்கியள்ளீர்கள். காலைப்பிடித்துக்கொண்டு யானையின் உருவம் உரலைப்போன்றது என்று கூறுவோருக்கு இதனைப்புரிந்து கொள்ள மிக்க காலமெடுக்கலாம். உங்களின் பன்முக மொழியாற்றலும் மற்ற இனங்களுடடான உறவும் இந்தளவு விசாலமாக சிந்திக்கச் செய்துள்ளது. குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் மற்றவர்களின் கலாசாரம், மனநிலை புரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை கசப்புணர்வைக்கொடுத்திருக்கும். கல்வியற்றவன் இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபடுவதை விட கற்றவனின் தூக்கம் மேலானது. உங்களுக்கு அது பொருந்தி வருகிறது. தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கின்ற கல்வியே மனிதர்களுக்குத்தேவை. அது மார்க்கக் கல்வியாகவோ, உலகக்கல்வியாகவோ இருக்கலாம்.

Post a Comment