January 17, 2020

நான் என்பதை தோற்கடிக்க வேண்டும், நாம் அடுத்தவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும்

- Imthiaz bakeer markar -

புதியதோர் வருடம் பிறந்திருக்கும் இத்தருணத்தில் கடந்த காலப்பகுதியை மீட்டிப்பார்க்கின்ற போது எமக்கு செவிமடுக்கக் கிடைக்கின்ற விடயங்கள் என்ன? உலகம் பூராகவும் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைகளை எமக்கு அறிந்துகொள்ள முடிகின்றது. கடந்த தினம் பாப்பரசரின் கைகளை ஒரு பெண் பிடித்திழுத்ததற்கு அவர் உடனடியாக கைகளை உதறித் தள்ளி கோபாவேசப்பட்டார். மறுதினம் அவர் இச்சம்பவத்திற்காக வேண்டி மன்னிப்புக் கோருகிறார். இது மிக முக்கியமானதொரு நிகழ்வு.

அவசரமாக கோபப்படுவது மனிதர்களது இயல்பு. இது மனிதனது எண்ணத்தின் வெளிப்பாடு. ஆனால் சிலபோது உடனடி எண்ணம் மனிதர்களுக்கு கோபத்திற்கும் தீய செயற்பாடுகளுக்கும் வழிகோலிவிடும். இதனைவிட அதிகமாகச் சிந்தித்து அடுத்த சிந்தனையின் மூலம் உடனடி சிந்தனையைத் தோற்கடித்து விட வேண்டும். பாப்பரசரின் சம்பவத்தின் மூலம் இப்படிப்பினையை நாம் பெற வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் மனிதனுக்குள் காணப்படும் உடனடி எண்ணத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இடம்பெற்ற அழிவுகளையே காண முடிகின்றது. இன்று அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அழிவுகளை மட்டிட முடியாதுள்ளது. மெல்போனில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று என்னுடன் தொலை பேசியில் உரையாடிய போது “மெல்போன் நகரத்திற்கு எவ்விதப் பாதிப்புக்களும் இல்லை. ஆனால் 50, 60 கிலோ மீற்றருக்கு அப்பால் தீப்பற்றுகிறது. பலர் உயிரிழந்துள்ளார்கள். விக்டோரியா பிராந்தியமும் தீயினால் கருகிப் போயுள்ளது. பல ஏக்கர் நிலங்கள் அழிந்து போயுள்ளன. சில இடங்களில் மக்கள் கப்பல்களில் ஏறி வேறு இடங்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.

மனிதன் சிறுகச் சிறுக சூழலுக்குச் செய்யும் அழிவுகளால் இன்று முழு உலகும் அல்லோல கல்லோலப்படுவதைக் காண முடிகின்றது. இது போன்ற சம்பவம் இன்று வறிய நாடொன்றில் இடம்பெற்றிருக்குமாயின் அவ்விடயம் பெரியளவில் பேசப்பட்டிருக்காது. பெரிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்ற போதே அது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகிறது.

மறுபுறத்தில் எமது வீட்டிற்கு, எமது கிராமத்திற்கு, எமது நாட்டிற்கு, இந்த உலகிற்கு எம்மால் எப்படியான நற்செயல்களைச் செய்ய முடியும் என்கின்ற எண்ணத்திலேயே ஒரு நாளை ஆரம்பிக்க வேண்டும். எல்லோராலும் இப்படியான எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க முடியுமாக இருந்தால் சிறந்ததொரு உலகை எம்மால் கட்டியெழுப்ப முடியும். உல கில் சிறந்ததொரு சூழல் உருவாகும். எனினும் இன்று உலகில் இடம்பெற்று வருகின்ற விடயங்களை அவதானிக்கையில் கவலையும் வேதனையுமே ஏற்படுகிறது.

இன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் யுத்தமொன்று ஆரம்பமாகும் நிலையுள்ளது. முழு உலகும் இதில் அவதானமாக உள்ளது. பல தசாப்த காலமாக அமெரிக்கா மத்திய கிழக்கில் பல்வேறு யுத்தங்களில் தொடர்புபட்டுள்ளது. வளங்களால் நிரம்பப் பெற்ற மத்திய கிழக்கில் எண்ணெய் அரசியலுக்காக வேண்டியா அல்லது வேறு ஏதும் நோக்கத்துக்காக வேண்டியா அமெரிக்கா மூக்கு நுழைக்கிறது என்பது தெரியவில்லை. ஒரு புறத்தில் 16 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் யுத்தம் செய்கிறது. 14 வருடங்களாக ஈராக்கில் யுத்தம் செய்கிறது. இவற்றால் அமெரிக்காவுக்கு என்ன இலாபம் கிடைத்தது? ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றிக் கொண்டி ருக்கும் தருணத்தில் ஈரானுடன் மற்றுமொரு யுத்தத் துக்குத் தயாராகிறது அமெரிக்கா.

இது ஈராக்குடனும் தொடர்புபடும். இவை தவிர லிபியா உள்ளிட்ட இதர இடங்களிலும் அமெரிக்கா நேரடியாக தொடர்புபடாவிட்டாலும் அல்கைதா, ஐஸிஸுக்கு எதிராக செயற்படும் பாணியில் தனது யுத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஈரானுடன் உருவாக்கியிருக்கும் யுத்தம் எங்கு ஆரம்பித்து எங்கு போய் முடிவடையும் என்று கூற முடியவில்லை. ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படும் எண்ணெய்க் கிணறுகளுக்கு அழிவுகளை ஏற்படுத்தி விடுமா? அல்லது உலகம் பூராகவும் உள்ள அமெரிக்க வர்த்தக நிலையங்கள், தூதுவராலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழிவுகளைக் கொண்டு வந்து சேர்த்து விடுமா? இது எங்கு போய் முடிவடையும் என்கின்ற அச்சம் இன்று முழு உலகையும் வாட்டிக் கொண்டுள்ளது. 

மறுபுறத்தில் ரோஹிங்கிய அகதிகளின் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவுகாணப்படாத நிலை உள்ளது. இன்னுமொரு புறத்தில் சிரியாவில் நாளாந்தம் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இது தவிர காஷ்மீரில் பெரும் பான்மை மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுகிறது. இந்தியாவிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹொங்கொங் நாட்டிலும் சுதந்திர உரிமைகளுக்கான போராட்டம் வலுத்து வருவதை காண முடிகிறது. இவ்வாரத்தில் மாத்திரம் அங்கு சுமார் 400 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவைதவிர இன்று உலகில் ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்திருப்பதை காண முடிகிறது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் சூமாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் சுரண்டல் களை நோக்காகக் கொண்டு மோதல்கள் உருவாக்கப்படுகின்றன.

மறுபக்கத்தில் மேலாதிக்கவாத மனோநிலையில் தாமே மேலாதிக்கவாதிகள், சிறுபான்மையை நாமே ஆள வேண்டும் என்ற உணர்வில் இனரீதியான மோதல்களை உருவாக்கிவிடுகின்றனர். இவையனைத்து விடயங்களும் எமக்கு படிப்பினைகளைத் தருகின்றன. எம்மால் எமது வீட்டையும், எமது சமூகத்தையும் சரியாக வடிவமைத்துக்கொள்ள முடியும் என்றிருந்தால் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியுமாகிறது. மனிதர்களாகிய எமது உள்ளத்தில் உருவாகும் தீய எண்ணத்தைக் களைந்து எமது உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது சமூகத்துக்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நல்லவற்றைச் செய்ய வேண்டும். இதனால் நாடு முன்னேற்றம் கண்டு உலகம் நல்லெண்ணங்களால் வளம் பெறும். இஸ்லாமும் எமக்கு இவ்வாறான முன்மாதிரிகளையே காட்டித் தந்துள்ளது.

கடந்த வாரம் நான் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு. லொகுபண்டார அவர்களை நலம் விசாரிக்கச் சென்றேன். அப்போது அவர் பௌத்த சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயத்தை பற்றி என்னுடன் கலந்துரையாடினார். அவர் “நாம் பொய்யான உலகத்திலேயே வாழ்கின்றோம். எமது கண் களிலிருந்து கபம் வெளியாகிறது. காது மற்றும் மூக்கிலிருந்து அசுத்தங்களே வெளியாகிறது. எமது உடலும் அசுத்தங்களையே வெளியாக்குகிறது. நினைக்கும் அளவுக்கு முழு உடம்பும் இனிமையானதல்ல. இதனை நாம் புரிந்துகொண்டு வாழ வேண்டும்” என்றார். இவ்விடயங்கள் தொடர்பாக இஸ்லாத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் என்பதை தோற்கடிக்க வேண்டும். அதற்கு மேலாகச் செல்லக்கூடாது. நாம் அடுத்தவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். எல்லா சமயங்களிலும் இதன் பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மலந்திருக்கும் இப்புதிய வருடத்தில் எமக்கு செவிமடுக்கக் கிடைக்கின்ற மோசமான செய்திகளற்ற உலகினை கட்டியெழுப்புவதற்கு நாம் எமது எல்லைக்குள் நின்று நல்ல விடயங்களை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மீள் பார்வை


1 கருத்துரைகள்:

Post a Comment