Header Ads



நாட்டின் சிறந்த தலைவர் கோட்டாபய,, ஐதேக புகழாரம்

பௌர்ணமி தினத்தன்று 34 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாட்டின் சிறந்த தலைவர் ஒருவர் இவ்வாறுதான் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையின்போது கோட்டாபய தாம் ஆட்சிக்கு வந்தால் சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அனைவரையும் விடுதலை செய்வதாகத் தெரிவித்திருந்தார்.

இதனால் பலரும் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். சிறைவைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு பிணை வழங்குவது தொடர்பில் சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவவரும் கவலையடைந்திருந்தனர்.

இதற்கமைய கடந்த பௌர்ணமி நாளில், 34 புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், எந்தவித பரிந்துரையும் இன்றி அரசு விடுதலை செய்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சொல்வதை செய்யும் தலைவர் என்றால் இவ்வாறுதான் செயற்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட்டதற்காக ஜனாதிபதிக்கும், நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆட்சிக்கு வந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தபோதும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.