Header Ads



25 வருடங்களின் பின், ரணிலுக்கு ஏற்பட்ட பரிதாபம்

25 வருடங்களின் பின்னர் பதவியில்லாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கொள்கை பிரகடனத்தை வெளியிடும் விசேட நாடாளுமன்ற அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது விசேட பதவியற்ற சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் மாறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரதேமதாஸ பதவி ஏற்றுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய ரணில், அந்த அரசாங்கத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சராகவும் பின்னர் இளைஞர் விவகார அமைச்சரவை அமைச்சராக செயற்பட்டுள்ளார்.

1993ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ கொலை செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க ஆட்சியில் ரணில் பிரதமரானார்.

எனினும் 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முதல் முறையாக சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் மாறினார். காமினி திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தமையே அதற்கு காரணமாகும்.

எனினும் 1994ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் காமினி திஸாநாயக்க கொலை செய்யப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவராகிய ரணில் 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.

2004 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் பின்னர் மூன்றாவது முறையாக ரணில் பிரதமராக செயற்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஒக்ஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் பிரதமராகினார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் தனது பதவியை இழந்த ரணில் 52 நாட்களின் பின்னர் 5வது முறையாக பிரதமராகினார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் வரை அவர் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார்.

அதற்கமைய 1994ஆம் ஆண்டில் இருந்து 25 வருடங்களுக்கு பின்னர் ரணில் எந்த ஒரு பதவிகளும் அற்ற நாடாளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.