Header Ads



சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், இர்பான் பதான் ஓய்வு: 10 முக்கிய தகவல்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

'ஸ்விங் கிங்' என்று ரசிகர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினரால் புகழப்பட்டவர் இர்ஃபான் பதான். குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்த இவரைப் பற்றிய 10 முக்கிய தகவல்கள்.

1. தனது 19-வது வயதில், 2003-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமானார் இர்ஃபான் பதான்.

2. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இர்ஃபான் நிகழ்த்தியுள்ளார்.

3. கடந்த 2006-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை இர்ஃபான் பதான் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

4. கடந்த 2007-ஆம் ஆண்டில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, இறுதியாட்டத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து இர்ஃபான் பதான் பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார். இறுதியாட்டத்தில் அவர் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

5. தான் விளையாடிய 29 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளையும், 1105 ரன்களையும் இர்ஃபான் எடுத்தார்.

6. 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 173 விக்கெட்டுகளையும், 1544 ரன்களையும் குவித்துள்ளார்.

7. அதேபோல் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 28 விக்கெட்டுகளையும், 172 ரன்களையும் எடுத்துள்ளார்.

8. ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத், மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக வெவ்வேறு ஆண்டுகளில் இர்ஃபான் பதான் விளையாடியுள்ளார்.

9. கபில்தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக இர்ஃபான் கிடைத்துள்ளார் என்று பிரபல வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இவருக்கு கடந்த காலங்களில் புகழாரம் சூட்டியுள்ளார்.

10. 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியாவுக்காக அறிமுகமான யூசுப் பதான் இர்ஃபானின் அண்ணன். இர்ஃபான் மற்றும் யூசுப் சகோதரர்கள் இணைந்து இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

No comments

Powered by Blogger.