Header Ads



தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்களை இனவாதிகளாக சித்தரிக்கும் போக்கு


 (இராஜதுரை ஹஷான்)


பரிசோதனையின்றி கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கமான நபரை பாதுகாப்பதற்கு அரச அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.அரச நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மூடி மறைத்து சர்வாதிகாரமான முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது. அனைத்து கட்டமைப்புக்களிலும். தற்போது அடக்குமுறைகள் தீவிரமடைந்துள்ளன.


முதலில் ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றார்கள், பின்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் திருடர்கள் என்றார்கள்.தற்போது அரச அதிகாரிகள் திருடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.அரச நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அரச நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.


சுங்கத்தில் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் உண்மையை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.


இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அரச அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


கொள்கலன் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கமான நபரை பாதுகாத்துக் கொள்வதற்கு அரச அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.


நாட்டில் நாளாந்தம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இயல்பாகி விட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரை அழைத்து வந்து பழைய புதைகுழிகளை தோண்டுவதை விடுத்து, மக்களின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்களை இனவாதிகளாக சித்தரிக்கும் போக்கு காணப்படுகிறது என்றார்.

No comments

Powered by Blogger.