Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அரசியலை நகர்த்திக் கொண்டு போகின்றார்கள் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்து மூன்றுக்கும் அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொள்வோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று வாழைச்சேனையில் நடைபெற்ற கல்குடா தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வாக்காளத்து வாங்கி, முண்டு கொடுத்துக் கொண்டு ஆதரவளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்காக அவர்களுக்கு நிறைய பணம் வழங்கப்படுகின்றது. அபிவிருத்திக்கு வழங்கும் பணத்தினை விட அவர்களுக்கு வழங்கும் பணம் கூடுதலாக உள்ளது. மக்கள் முன்னர் எவ்வாறு இருந்தார்களோ அதேபோன்றே இப்போதும் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று எமது இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலை வாய்ப்புக்கள் இன்றி பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பணம் படைத்தவர்களிடம் பணம் வாங்கி விட்டு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளனர். கஷ்டப்பட்ட இளைஞர் யுவதிகள் பணம் வழங்க முடியாமல் இன்றும் கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்ற நோக்கில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அரசியலை நகர்த்திக் கொண்டு போகின்றார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். திட்டமிட்டு செய்வதன் மூலம் பிரதேசங்களை, மக்களை அபிவிருத்தி செய்யக் கூடிய நிலைமை உள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைச்சு பதவி பெற வேண்டும் என்ற கருணாவின் நோக்கோடு இணைந்து நாம் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கின்றோம். கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் மூலம் எதிர்காலத்தில் எங்களது பலத்தை காட்ட வேண்டும்.

பலர் பதவி கேட்டு ஓடி நின்றார்கள். கருணா கேட்கவில்லை. கேட்டிருந்தால் வழங்கப்பட்டிருக்கும் ஏனெனில் கோட்டாபய ராஜபக்சவும், மஹிந்தவும், கருணாவும் நல்ல நண்பர்கள்.எங்களுக்கு தற்போது பெரும்பாலான ஆதரவுகள் பெருகிக் கொண்டு வருகின்றது. எதிர்வரும்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்து மூன்றுக்கு மேல் ஆசனங்களை பெற்றுக் கொள்வோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தேசியம் என்பது எங்களுக்கும் இருக்கின்றது.

நான், தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன். விடுதலைப் புலிகள் காலத்தில் இயக்கத்திற்காக பாடுபட்ட ஒருவன். இதனால் பல துன்பங்களை அனுபவித்தவன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் போராட்டத்திற்குள் போகவில்லை. ஏன் துரைராசசிங்கம் கூட ஓடி வீட்டுக்குள் ஒழித்தவர். யுத்தம் முடிந்தவுடன் வெளியில் வந்தார். இதனால் நான் பல இன்னல்களை அனுபவித்து வெளிநாட்டில் சிலகாலம் வாழ்ந்தேன் , என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.