Header Ads



பெரிய குற்றங்களை இழைத்துவிட்டு தப்பிவிட்டோம் என, கனவு காண்பவர்கள் சிறைக்குச்செல்லத் தயாராக வேண்டும்

கடந்த ஆட்சியில் மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்த ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள். நீதித்துறை அவர்களைத் தப்பவிடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெறும் கைதுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல. உண்மைகளை மறைத்தவர்களும், பொய்களைக் கூறியவர்களுமே அடுத்தடுத்துக் கைது செய்யப்படுகின்றார்கள். பெரிய குற்றங்களை இழைத்துவிட்டு தப்பிவிட்டோம் எனக் கனவு காண்பவர்கள் சிறைக்குச் செல்லத் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டார்கள்.

இவ்வாறான மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் அவர்களின் ஆட்சியில் நீதித்துறையின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்கள். ஆனால், எமது புதிய ஆட்சியில் அந்த மோசடியாளர்கள் தப்பவே முடியாது. நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்யும்.

கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு நாசமாகியபடியால்தான் சர்வதேச ஆதிக்கம் இங்கு தலைதூக்கியது. ஆனால், இதற்கு எமது ஆட்சியில் இடமே இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிய பாதையில் நாம் கொண்டு செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.