October 23, 2019

றிஷாத்தும், ஹக்கீமும் அமைச்சரவையில் இருப்பார்களா? சஜித்திடம் கேள்விகேட்டு வசந்த அனுப்பிய கடிதம்

புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் கடிதம் மூலமாக புதிய அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளர் யார் மற்றும் ரவி கருணாநாயக்க, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் போன்றோர் எதிர்கால அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்களா என்பது உள்ளிட்ட நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, அதற்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாவிட்டால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார். 

இது தொடர்பில் இன்று -23- கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு சுஜீவ சேனசிங்க, அஜித் பி பெரேரா, ஹர்ஷ டி சில்வா, தலதா அதுகோரள போன்ற பலருடன் நானும் இணைந்து போராட்டமொன்றை நடத்தியதன் ஊடாகவே இறுதியில் அவரை வேட்பாளராகக் களமிறக்க முடிந்தது. சஜித் பிரேமதாசவை நன்கு அறிந்தவன் என்ற வகையில் அவரைக் களமிறக்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. அதில் எவ்வித பிரச்சினைகளோ அல்லது மாற்றுக்கருத்துக்களோ இல்லை. 

ஆனால் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எமக்குள் ஒரு சிறு அச்சம் தோன்றியிருக்கிறது. ஏனெனில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்காக நாம் போராடிய போது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களும் அவரை மிக மோசமாக விமர்சித்தவர்களுமே இன்று தேர்தல் பிரசார மேடைகளில் முன்னணி வகிக்கின்றனர். அவர்களே பிரசாரத்தின் உரிமையாளர்களாக மாறியிருக்கின்றார்கள். சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சுஜீவ சேனசிங்க போன்றோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. 

நாம் பொதுமக்களைச் சந்திக்கும் போது, எமது அரசாங்கத்தில் யார் பிரதமராகப் பதவி வகிப்பார்கள் என்று மக்கள் கேட்கின்றனர். யார் பிரதமர் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்றும் வினவுகின்றனர். ஏனெனில் அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்கு அமைய அமைச்சரவையை நியமிப்பதில் பிரதமரால் ஆதிக்கம் செலுத்தமுடியும். 

எனவே மீண்டும் பழைய மத்திய வங்கிக் கொள்ளையர்கள், நெடுஞ்சாலை நிர்மாணத்திட்டத்தில் மோசடி செய்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. புதிய மாற்றமொன்றை ஏற்படுத்துவதாகக்கூறி பழைய பிரதமரும், பழைய அமைச்சரவையும் நடைமுறையில் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. சஜித் பிரேமதாச நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கு முயற்சித்தாலும் கூட, மோசடி செய்தவர்கள் அடங்கிய அமைச்சரவையைக் கொண்டு அவரால் அதனைச் செய்ய முடியாது. 

அதேபோன்று அடிப்படைவாத இயக்கங்களுடனும், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுடனும் தொடர்பினைப் பேணியதாக ஆதரங்களுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையிலும், அத்தகைய நபர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் ஏறிநிற்கின்றார்கள். அவர்களைக் கட்டியணைத்துக்கொள்கின்றார்கள். 

நியாயமான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவரும் இதனை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எமது கட்சியில் கலீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர் ஹாசீம் போன்ற நேர்மையான சிறந்த முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்களைக் கட்டியணைப்பது மாத்திரமல்ல, தலையில் தூக்கிவைத்தாலும் தவறில்லை. 

இத்தகைய காரணங்களினால் தான் புதிய அரசாங்கத்தில் யார் பிரதமராக இருப்பார்கள் உள்ளிட்ட விடை தெரியாத கேள்விகளுக்கான பதில்களை சஜித் பிரேமதாஸவிடம் கடிதமொன்றின் மூலம் கோரியிருக்கிறேன். அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் இதனை நான் செய்யவில்லை. மாறாக மக்களின் மனதிலுள்ள இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பகிரங்கப்படுத்துவதன் ஊடாக அவருக்கான வாக்குகள் அதிகரிக்கும். அதேபோன்று சஜித் பிரேமதாஸ உரிய பதிலை வழங்குவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலேயே தற்போது ஊடகங்களுக்கு இதனை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

3 கருத்துரைகள்:

i thought this man is gentlemen
but huhuhuhhha
this idiot seems to be a another racist

ஏதோ பாராளுமன்ரமும் அமைச்சரவையும் இவர்ர அப்பனூட்டு சொத்து மாதிரி கேள்வி கேட்கார். மஹிந்த தாற காசி மூட்டய இருட்டில போய் வாங்கி எடுங்கோ வெட்கப்படாம

This man somersaulted three times during the infamous constitutional drama.
Now he finds excuses for another one.
He found no way than a communal hatred and racism.
So called legislators in democratic Parliament.
Shame

Post a comment