Header Ads



ஜனாதிபதி தேர்தல் தள்ளிப்போகுமா..? மஹிந்த - ரணில் இணங்கினார்களா...??

ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள வானொலிச் சேவையொன்றில் இன்றைய தினம் ஒலிபரப்பாகிய செய்தி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பில் தமக்கு ஆட்சேபனை கிடையாது என மஹிந்த மற்றும் ரணில் தரப்புக்கள் அதிகாரபூர்வமற்ற அடிப்படையில் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலையும், பொதுத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடாத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் மீளவும் உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில வேளைகளில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே தடவையில் நடத்தக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தனது பதவிக் காலம் தொடர்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியிருந்த போது 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஐந்து ஆண்டுகளே பதவி வகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை 19ஆம் திருத்தச் சட்டம் எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வந்தது என்பது குறித்து ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.