Header Ads



யானைக்குள் சமரச முயற்சி, சஜித் தரப்பு விடாப்பிடி, அலட்டிக்கொள்ளாத ரணில்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் விடயம், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியைச் சார்ந்தது என்று கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அதனைவிடுத்துத் தன்னிச்சையாக எவரும் வேட்பாளர் தாமே என்று அறிவித்துக்கொள்வது பொருத்தமில்லாதது என்று தெரிவித்த அமைச்சர் அதனை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் உருவாகி இருக்கும் முறுகல் நிலையைத் தீர்ப்பதற்கானதொரு முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நடுநிலைக்குழுவொன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.  

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்தில் முறுகல் தொடர்வது கட்சியைப் பெரிதும் பாதிக்கலாம் என்பதை உணர்ந்துள்ள கட்சியின் நடுநிலைக்குழு கட்சியை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.  

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் கட்சி உயர்மட்டம் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்காத நிலையில், அமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தானே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவித்துள்ளதோடு கட்சி ஒரு தரப்பினருடன் இணைந்து தனது தேர்தல் பிரசாரத்தையும் முடுக்கிவிட்டிருக்கின்றார்.

கடந்த வாரத்தில் பதுளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கூட்டத்தையடுத்து நேற்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆதரவுடன் மாத்தறையில் மற்றொரு பிரசார கூட்டமும் நடத்தப்பட்டது.   

இக்கூட்டங்கள் எதுவும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தால் முன்னெடுக்கப்படவில்லை. கட்சித் தலைவர் இக்கூட்டங்களுக்கு அழைக்கப்படவுமில்லை என்று கட்சி செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருக்கின்றார்.  

அதேசமயம் ஜனநாயக தேசிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் கூடியே வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என கட்சித் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.  

இந்த நிலையில், கட்சி இரு துருவங்களாக பிளவுபட்டிருப்பதை விரும்பாத கட்சி முக்கியஸ்தர்கள் பெரும் கவலை கொண்டிருக்கின்றனர்.

இது அடுத்த தேர்தலில் கட்சி வெற்றியைப் பெரியளவில் பாதிக்கும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டு வருவதால் கட்சியின் நடுநிலைக் குழுவொன்று இரு தலைவர்களுக்குமிடையில் சமரச முயற்சியொன்றை முன்னெடுப்பதில் அவசரம் காட்டியுள்ளது.  

இந்த சமரச முயற்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறக்கூடுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் நடுநிலைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியதன் பின்னர் அடுத்து சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளது. அதன்பின்னர் இரு தலைவர்களையும் ஒரே மேசையில் அமரவைத்து இறுதி சமரச முயற்சியில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது.  

எவ்வாறாக இருந்த போதும் சஜித் பிரேமதாசவும் அவரது தரப்பும் விடாப்பிடியான போக்கை கொண்டிருப்பதாகவும் கட்சி வேட்பாளராக சஜித்தின் பெயர் அறிவிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கோரிக்கைகள் குறித்து அலட்டிக்கொள்ளாமல் தனது அன்றாடப் பணிகளை அமைதியாக மேற்கொண்டு வருகின்றார்.

ஜனநாயக தேசிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் கூடியே வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்து வருவதாகவும் அந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எனினும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஏ.எம். நிலாம்

No comments

Powered by Blogger.