Header Ads



யானைக்குள் மோதல் வெடிக்கலாம் - ரணிலின் காய் நகர்த்தல் பலிக்குமா...?

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசியக் கட்சியிக்குள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துக் கொள்ளும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்க்க புதிய கூட்டணி அமைத்து, கையெழுத்திடுவது குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிள் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 9.30இற்கு அலரி மாளிகையில் கூடிய ஆராய்கிறது.

கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துக் கொள்ள முடியாது என்பதை அறிந்துள்ள ரணில் விக்ரமசிங்க, புதிய கூட்டணியொன்றை அமைத்து தன்மூலம் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக முடியாது என்பதை அறிந்துகொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க சிறுபான்மைக் கட்சிகளைப் பயன்படுத்த வியூகம் வகுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

‘ஜனநாயக தேசிய முன்னணி” என்ற பெயரில் புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 05ஆம் திகதி கையெழுத்திடப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துக் கொள்ள முடியாது என்பதால் புதிய கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி, தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் யாப்பு மற்றும் கூட்டணி அங்கத்தவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது ஆகிய விடயங்களுக்கு கட்சியின் செயற்குழுவின் அனுமதிப் பெறுவதற்காக இன்று காலை 9.30இற்கு அலரி மாளிகையில் அந்தக் கட்சியின் செயற்குழு கூடுகிறது. செயற்குழுக் கூட்டத்தில் புதிய கூட்டணிக்கான யாப்பிற்கு அனுமதி பெறப்படவுள்ளதாகயும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களைக் குறைத்துவிட்டு, கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் அங்கத்தவர்களை அதிகரித்து, அவர்களின் ஊடாக புதிய கூட்டணியின் வேட்பாளராக தன்னை நியமித்துக் கொள்ள ரணில் விக்ரமசிங்கத் திட்டமிட்டுள்ளார். தனக்கு நெருக்கமான ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். அத்துடன், சிறுபான்மைக் கட்சிகளை ஏமாற்றி, தனக்கு சாதகமான விருப்பத்தைப் பெற்று, தான் ஜனாதிபதி வேட்பாளர் ஆகும் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க அரங்கேற்றத் தயாராகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள் அதிகமாக இருந்தால், தனக்கான ஆதரவு குறைந்துவிடும் என்பதால் புதிய கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவத்தை 51ஆக ரணில் விக்ரமசிங்க வரையறுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க கூட்டணி யாப்பின் படி 70 வீதமான ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடனும், ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தனக்கு விசுவாசமானவர்களின் ஆதரவுடனும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார்.

முதலில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னர், புதிய கூட்டணி அமைத்து, ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரியிருந்தனர். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க விருப்பமாட்டார்கள் என்பதால், கூட்டணி மூலம் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ரணில் அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று நடக்கும் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சித் திட்டத்திற்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட வேண்டும் என்ற கருத்து வலுக்க ஆரம்பித்தது முதல் ரணில் விக்ரமசிங்க உசாரடைந்துள்ளார். இதனைத்தடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துக் கொள்வதற்கான இரகசிய அரசியல் திட்டத்தை வகுத்து வந்த ரணில், சஜித் பிரேமதாச குறித்த செய்திகள் வெளிவர, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை புதிய கூட்டணியின் தலைவர்களே எடுப்பார்கள் என்ற கருத்தையும் ரணில் விக்ரமசிங்க பரப்ப ஆரம்பித்தார்.

இதன்படி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஆதரவும் தேவை என்ற கருத்தை கட்சிக்குள் நிலைநாட்ட ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருந்தார்.

ரிசாட், ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு

புதிய கூட்டணி குறித்து புரிந்துணர்வு ஏற்படும் வரையில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டாம் என ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தனர். எனினும், ரணில் விக்ரமசிங்க இதனைப் புறந்தள்ளி, புரிந்துணர்வு ஏற்பட முன்னரே தனக்குத் தேவையான 70 சதவீத ஆதரவை சேர்த்துக் கொண்டு தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் தான் நினைத்தை சாதிக்கும் நபர் என்ற பெயரைப் பெற்றவர். எனினும், மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தி நிலவும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க பெயரிடப்படும் நிலையில், தேர்தல் அறிவிக்க முன்னரே மகிந்த ராஜபக்ச தரப்பு 50 வீத வெற்றியைப் பெற்றுவிடும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.