June 05, 2019

முஸ்லிம்களின் உதவிகள் இன்றி, தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது - பிமல் ரத்நாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கையாட்களும், அவர்களுக்கு ஆதரவான சில ஊடகங்களும் நாட்டில் இனவாதத்தை ஊதிப்பெரிதாக்கியதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நாட்டில் இனவாதத்தை தூண்டும் இந்த முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளதாகவும் கடுமையாக சாடினார்.

‘சில அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவியை விட்டு ஒருநாளும் இருக்கமுடியாது. அமைச்சுப் பதவிகளுக்கு அவர்கள் அடிமையாகி உள்ளனர். குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ராஜபக்ச தலைமையிலான சஹ்ரானின் சிங்கள சகோதரர்களாக அடையாளப்படுத்தக் கூடிய சில இனவாத உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத்தை அவர்களுடைய ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரப்படுத்தினர். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் உதவிபுரிந்தார்கள்.

இந்த அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பொறுப்புகூற வேண்டும் என்பதோடு இதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்தது போதாது. அவர்கள் முஸ்லிம் என்பதற்காக அல்ல. அமைச்சர்களாக இருந்த காரணத்தினால் அவர்களும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும். இன்று ரணில் விக்கிரமசிங்க இனவாதத்தை விரும்புகின்றார். ஏனென்றால் இப்போது பொருட்கள் விலை பற்றி மக்கள் பேசுவதில்லை. பிரதமர் இனவாதத்துக்காகவும் ராஜபக்ச மற்றும் அவருடன் தொங்கிக்கொண்டுள்ள இனவாதப் பிரிவினரும் இனவாதத்துக்காக செயற்படுகின்றனர்.

அரசியல் ஒப்பந்தங்கள் இன்றி நாட்டுக்காக பணிபுரியுங்கள். சரியாக பார்த்தால் அரசாங்கமே பதவிவிலக வேண்டும். அரசாங்கம் விலகி தேர்தலுக்கு செல்ல வேண்டும். கடந்த போர்க் காலத்திலும்கூட இந்த நாடாளுமன்றத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பலியாகவில்லை. அதேபோல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களிலும் எந்தவொரு அரசியல்வாதியினுடைய உறவினர்களும் உயிரிழக்கவில்லை. நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாதத்தை நாம் எதிர்ப்பதோடு நாட்டை நாம் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்.

போர் இடம்பெற்ற காலத்தில் தமிழர்கள் என்பதற்காக வெறுமனே கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வைக்கப்பட்ட தமிழர்களும் இருக்கிறார்கள். இன்று அந்த நிலையே முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு மஹியங்கனையில் வைத்து கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் பெண் அரசியல் மற்றும் பொது மக்களின் உரிமைக்கான சர்வதேச சட்டமான ICCPR என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பிணையில் செல்ல முடியாத வகையில் இந்த சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமானால் ஒரு பெண் தர்மச் சக்கரத்தை ஆடையாக அணிந்து செல்வாரா?. இதேவேளை ஒரு மாதத்துக்கு முன்னர் புத்தளத்தில் பாத்திமா ரினோஷா என்ற பெண் முகத்தை பாதியாக மூடும் வகையில் ஆடை அணிந்தமைக்காக கைது செய்யப்பட்டு ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த அரசாங்கம் அதிகாரிகளுக்கு பிணைவழங்க முடியாத சட்டத்துக்கு அமைய சிறைவைக்கும்படி ஆலோசனை வழங்கியிருக்கின்றது. முஸ்லிம் மக்களின் உதவிகள் இன்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது. மாறாக இப்படியான நடவடிக்கைகளினாலும், இனவாத செயல்களினாலும் அதனை செய்ய முடியாது.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சுற்றிவளைப்புத் தேடுதல்களும்,சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழர் தாயகப்பகுதியான வடக்கிலும் மீண்டும் போர்க் காலச் சூழல் தோற்றுவிக்கப்பட்டு தமிழ் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழர் தரப்பினால் தொடர்ச்சியாக குற்றம்சாடடப்பட்டும் வருகின்றன. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தமிழர் பகுதிகளில் விசேடமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு காரணம் என்ன என்றும் அரசாங்கத்திடம் வினவினார்.

வவுனியா தொடக்கம் ஆனையிறவு பகுதிவரை பேருந்துகள் எல்லா இடங்களிலும் நிறுத்தப்படுகின்றன. ஆனால் காத்தான்குடியில் அப்படியல்ல தமிழ் இடங்களுக்கு மட்டும் ஏன் இப்படி செய்யப்படுகிறது? இப்போது தேசிய அடையாள அட்டையில் முன்னர் தமிழரா என்று பார்ப்பார்கள். ஆனால் இன்று முஸ்லிமா என்று பார்க்கின்றனர். ரத்தன தேரரின் உண்ணாவிரதத்தின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்தார்கள். இப்போது நாடு வென்றுவிட்டதா? இப்போது முஸம்மிலை மேல் மாகாண ஆளுநராக நியமித்துவிட்டார். அவருக்கெதிராக போராட்டம் நடத்துவார்களா?”எனவும் கேள்வியெழுப்பினார்.

3 கருத்துரைகள்:

மிக சரியான உண்மை

Hon. Pimal Ratnayake: இந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தின் ஆள் பகுதியில் இருந்து வெளிப்பட்டு இருக்குமானால் உண்மையிலேயே சேற்றில் விளையக்கூடிய செந்தாமரைகளுல் நீங்களும் ஒருவர்தான். அதில் சந்தேகமேயில்லை.

Post a comment