Header Ads



மஸ்ஜித்களை மையப்படுத்திய, நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள்

புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இவர்களது துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளை நல்கி வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா ஈருலக நற்பாக்கியங்களையும் அவர்களுக்கு அருள வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றது.

இத்தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் சாதாரணமானவையல்ல. அதிகமானோர் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் நிர்க்கதியாகியிருக்கின்றனர். இந்நிலையில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கத்தின் மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவசர நிவாரண உதவிகள் முஸ்லிம் சமூகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய முழு விபரங்களையும் ஆவணப்படுத்தி குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்திலும் கிராம சேவகர் அலுகலகத்திலும் கண்டிப்பாக பதிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களின் தலைமையில் 17.05.2019ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு மஸ்ஜித்கள் சம்மேளனங்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் நாட்டில் ஏற்பட்ட சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற பல்வேறு அனர்த்தங்களின்போது மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணப் பணிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்டது போன்றே பாதிக்கப்பட்ட பகுதிகளின் அவசர நிவாரணப் பணிகளையும் மஸ்ஜித்களை மையப்படுத்தி துரிதப்படுத்துவதே சிறந்தது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்ப பாதிக்கப்பட்ட பகுதிகளை மஸ்ஜித் சம்மேளனங்களுக்கும் ஜம்இய்யாவின் கிளைகளுக்கும் பின்வரும் ஒழுங்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொறுப்புக் கொடுத்துள்ளது.

புனித ரமழான் மாதத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அவசரமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் தத்தமது மஸ்ஜித் சம்மேளனங்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு அனைவரிடமும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றபோது பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்ளுமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது:

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவு உதவிகள் சென்றடையும் விதத்தில் ஏற்பாடுகளை செய்யுமாறு பொறுப்பளிக்கப்பட்டுள்ள மஸ்ஜித் சம்மேளனங்களுக்கும் ஜம்இய்யவின் கிளைகளுக்கும் ஜம்இய்யா ஆலோசனை வழங்குகின்றது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஸஹர் மற்றும் இப்தார் ஏற்பாடு செய்யும் விடயத்தில் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் அனைவரும் பங்களிப்புச் செய்யுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. 

உங்கள் ஸகாத்தை தகுதியான ஏனையவர்களுக்கு கொடுப்பது போன்றே அதில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட, ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு வழங்குமாறும் உங்கள் ஸதகாக்களை அதிகளவு இந்நிவாரணப் பணியில் வழங்குமாறும் ஜம்இய்யா முஸ்லிம்களிடம் வேண்டிக் கொள்கின்றது. 

வஸ்ஸலாம். 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர், பிரச்சாரக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.