Header Ads



7 முஸ்லிம்களுக்கு அநீதி - அரச சேவையாளர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

(அப்துல் சலாம் யாசீம்)

அரச  சேவையாளர்களினால் பொது மக்களுக்கு அநீதி விளைவிக்கக் கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

திருகோணமலை-புல்மோட்டை அரிசி மலை காணி தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போதே இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குடியிருக்கின்ற ஏழு முஸ்லிம் பொதுமக்களினால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  சட்டத்தரணி எம். எம். ரிஸ்வான் முஹம்மட் ஊடாக   திருகோணமலை மேல் நீதிமன்றில் "எழுத்தானை"  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக குறிப்பிடப்பட்ட வன இலாக்கா திணைக்களம்,குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் அத்துடன் சட்டமா அதிபர் ஆகியோர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட புல்மோட்டை அரிசி மலைப் பகுதியைச் சேர்ந்த ஏழு  நபர்களுக்கும் குச்சவெளி பிரதேச செயலகத்தினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் தொல்பொருள் திணைக்களத்தினாளும்,நிலஅளவைத் திணைக்களத்தினாளும்  நில அளவீடு செய்ய முற்பட்ட வேளையில் தங்களுக்கு எதிராக ஏற்பட்ட அநீதி தொடர்பாகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரச உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் குறித்த பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது அநீதியான செயல் என்றும் அரச உத்தியோகத்தர்கள் அரச கடமையை பக்க சார்பின்றி மேற்கொண்டால் அவர்கள் நீதிமன்றம் வரத் தேவையில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் அரச சேவையாளர்கள் கடமையைச் செய்கின்ற போர்வையில் அநீதி செய்யும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தை அவர்கள் நாடுகின்றனர் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும்  தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் வழக்கிற்கு சமூகமளிக்கும் போதும் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.

1 comment:

  1. ஏன் சாதி பெயர் குறிப்பிட்டு தலைப்பு இடப்பட்டுள்ளது ஒருவர் நாங்கள் அப்படித்தான் ஞாயமானவர்கள் என்று குறிப்பிடுவார் மற்றவர் உங்களுடைய ஞாயத்தை அறியாமல் கிடக்கிறது என்பார் வாசிக்க முடியாத வார்த்தைகளை எழுதுவார்கள். இனவாதம் இல்லாதவர்களுக்கும் இனி இனவாதம் முளைக்கும். ஏன் இந்த தலைப்பு.

    ReplyDelete

Powered by Blogger.