Header Ads



இலங்கையில் தங்கம் கலந்த, மண் உள்ளதா..? 51 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் ஏற்றுமதி

தங்கம் கலந்த மண் ஏற்றுமதி தொடர்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியூஸ்ஃபெஸ்ட் பல விடயங்களை வெளிக்கொணர்ந்தது.

அன்று நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டிய விடயங்கள் தற்போது விசேட கணக்காய்வு அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்காபரண உற்பத்தி நிறுவனங்களினால் அகற்றப்பட்ட தங்கம் கலந்த மண் எனத் தெரிவித்து, அந்த மண்ணுடன் கலந்துள்ள தங்கத்தை வேறாக்குவதற்காக மூன்று தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டதையும் சுங்கப் பரிசோதனைகளின் பின்னர் தங்கம் கலந்த மண்ணுடனான கனரக வாகனங்களை சுங்கத்தினர் கைப்பற்றியதையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்தது.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மண் ஏற்றப்பட்ட 51 கொள்கலன்கள், இலங்கை சுங்கப் பிரிவினரால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கத்துகள்கள் கலந்த மண் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், ஏற்றுமதி செய்யப்படவிருந்த 23 கொள்கலன்களை 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.

அவற்றில் 19 கொள்கலன்கள் தொடர்ந்தும் சுங்கப்பிரிவின் பொறுப்பிலுள்ளது.

தங்க தொழிற்துறையிலிருந்து நீக்கப்பட்ட பதார்த்தங்களில் அடங்கியுள்ள தங்கத்தின் தொகையைவிட, ஏற்றுமதி செய்யப்படவிருந்ததில் அதிக தங்கம் உள்ளடங்கியிருந்ததாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்றுமதியாளர்கள் மண்ணில் தங்கத்தை கலந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுங்கத்திற்கு கட்டணம் செலுத்தாது அவற்றை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்காபரண உற்பத்தி ஏற்றுமதியில் நீக்கப்பட்ட தங்கம் கலந்த மண்ணை இந்தியாவிற்கு மாத்திரம் ஏற்றுமதி செய்வதற்கு தனியார் நிறுவனம் பெற்றுக்கொண்ட அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி, தங்கம் கலந்த 51 கொள்கலன்களை இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

இவ்வாறானவற்றை ஏற்றுமதி செய்யும்போது விசேட அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு, சுங்கப்பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் நாட்டிற்கு எவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவிடம் வினவியபோது,

சரியான பதிலை வழங்குவது சிரமமானது. காரணம் கடந்த பல வருடங்களாக இவ்வாறு மண் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மண் கொள்கலன்களை நாம் இங்கு பரிசோதனைக்கு உட்படுத்தினோம். 150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான தங்கம் அதில் அடங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கமைய, சுங்கத்தினால் அறவிடப்பட வேண்டிய வரி எவ்வளவு என்பதை மதிப்பிட வேண்டியுள்ளது. அத்துடன், இலங்கையிலிருந்து மண் ஏற்றுமதி செய்வதாயின் அதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பணம் செலுத்தப்படவில்லை. ஆகவே, உரிய மதிப்பீட்டை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம்.
என பதிலளித்தார்.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சில தீர்மானங்களையும் கணக்காய்வாளர் நாயகம் முன்வைத்துள்ளார்.

சிலவேளை, இந்த தங்க மண் என்பது இலங்கைக்கு புதிய விடயமாக இருக்கலாம். உண்மையில் அவ்வாறானதொரு விடயமுள்ளதா, இலங்கையிலுள்ள மண்ணில் தங்கமுள்ளதா இல்லாவிட்டால் உற்பத்தியிலிருந்து நீக்கப்பட்டவையா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அவ்வாறில்லாவிட்டால், வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையா போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவை குறித்து விசேட விசாரணை நடத்தியே உண்மையை அறிந்துகொள்ள முடியும்.
என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கடமையாகும்.

அத்துடன், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் அவசிமானதாகும்.

இவ்விடயத்தில் இரண்டு முக்கிய தரப்புகள் தொடர்புபட்டுள்ளன. ஒன்று இலங்கை சுங்கம் மற்றையது அகழ்வுப் பிரிவு.

சுங்க விடயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள HS குறியீடு தொடர்பிலும் பிரச்சினையுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.