Header Ads



மலிங்கவின் அபாரம் 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்டுக்களை சரித்து சாதனை


இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மலிங்கா, நள்ளிரவு இலங்கை பறந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி மிரட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முன்னதாக, உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் தான் உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற முடியும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

ஆனால், 2019 ஐ.பி.எல் தொடரில் தனது முதல் போட்டியிலேயே டெல்லி அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. மும்பை அணியில் பந்துவீச்சு சரியில்லாததால் டெல்லி அணி 213 ஓட்டங்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மலிங்காவுக்கு மும்பை அணி நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல் தொடரில் விளையாட மலிங்காவுக்கு அனுமதி அளித்தது.

அதன் பின்னர் இந்தியா வந்த மலிங்கா, தொடர்ந்து மும்பை அணியில் விளையாடி வருகிறார். நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டி நடந்தது. 4ஆம் திகதி இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மும்பை அணியில் விளையாடி விட்டு இலங்கை உள்ளூர் தொடரிலும் விளையாட மலிங்கா முடிவு செய்தார். அதன்படி நேற்றைய போட்டியில் விளையாடிய அவர் அபாரமாக பந்துவீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி நள்ளிரவு 12 மணியளவில் முடிந்ததைத் தொடர்ந்து, மைதானத்தில் இருந்து புறப்பட்ட மலிங்கா மும்பையில் இருந்து விமானத்தில் இலங்கைக்கு பறந்தார். சுமார் இரண்டரை மணிநேர பயணத்தில் இலங்கையை அடைந்த அவர், அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் போட்டி நடைபெறும் கண்டிக்கு சென்றார்.

அங்கு இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், காலே அணியின் கேப்டனாக களமிறங்கி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மலிங்கா 12 மணிநேரத்திற்குள் இரண்டு அணிகளுக்காக விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏப்ரல் 11ஆம் திகதி வரை காலே அணிகாக விளையாட உள்ள மலிங்கா, அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.