Header Ads



குழப்பத்தை ஏற்படுத்தியது மைத்திரியே - முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்த வேண்டும்

இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்து நிலையான அரசு அமைய வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் அங்குள்ள ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியின் பின்னர் உறுதிப்பாடற்ற நிலைமை நீடிக்கின்றது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு.

எவரைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்தாரோ, அவரின் கையைப் பிடித்து இந்த உறுதிப்பாடற்ற - குழப்பமான நிலைமையை மைத்திரிபால ஏற்படுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தேவையில்லை என்றுதான் மைத்திரிபாலவுக்கு மக்கள் வாக்களித்தனர்.

அந்தப் பேராபத்து நிறைந்த காலப் பகுதியில், சிவில் அமைப்புக்களுக்கு நானும், சோபித தேரரும் தலைமை தாங்கி, எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மஹிந்தவை எதிர்த்த தரப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து மைத்திரிபாலவை பொது வேட்பாளராக நிறுத்தி, மக்களின் வாக்குப் பலத்தின் ஊடாக அவரை வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினோம்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சியில் அமர்த்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினார். இது குழப்பம் என்பதற்கும் அப்பால் அரசியல் சதி.

இந்தச் சதி நடவடிக்கைக்கு முடிவு கட்டி ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்தாலும், அரசியல் ரீதியான குழப்பங்கள் நாட்டில் தொடர்கின்றன. இந்தக் குழப்பங்களுக்கு ஜனநாயக ரீதியில்தான் பதில் சொல்ல வேண்டும்.

எனவே, நாட்டில் நடக்கப் போகின்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக நடந்தால் நல்லது. இந்தக் குழப்பங்களுக்கு அப்போதுதான் முடிவுகட்ட முடியும்” - என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.