Header Ads



"கழுத்தறுக்கும் நாடகத்துக்கு துணை போகமாட்டோம்"

-எம்.ஏ.எம். நிலாம்-

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்லரெனவும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சி நல்லாட்சியிலிருந்து விடுபட்டு தனியாக அரசமைப்பது தொடர்பாகவோ, இடைக்கால அரசு அமைப்பு குறித்தோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ச அணியுடனான கூட்டு குறித்து ஜனாதிபதியோ, கட்சியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அவர் உறுதிபடத்தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டிலிருந்து சுதந்திரக்கட்சியை வெளியே எடுப்பதற்கு 16 பேர் கொண்ட அணியை மஹிந்த தரப்பு பயன்படுத்துவதாகவும் இது அவர்களின் நீண்ட காலத்திட்டமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நல்லாட்சி அரசு 2020வரை தொடருமெனவும் அவர்களின் திரை மறைவு நாடகம் ஒருபோதும் அரங்கேறப் போவதில்லையென்றும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச்சேர சுதந்தரக்கட்சி கனவில் கூட நினைக்கவில்லை. 16 பேர் வெளியேறிய நிலையிலும் அரசாங்கம் பலமுள்ளதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சியை கவிழ்ப்பதற்கு 2015 முதலே சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால், ஒன்றில் கூட அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.

சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதற்கு பேச்சு நடத்தப்படுவதகவும் பேச்சுக்கள் சாதகமாக காணப்படுவதாகவும் 16 பேர் கொண்ட அணியினர் தெரிவித்து வருகின்றனர். சுதந்திரக்கட்சியுடன் இன்று வரையில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் இடம்பெறவில்லை. இணைப்பு குறித்து சுதந்திரக்கட்சி உயர்மட்டம் சிந்திக்கக்கூடவில்லை. சுதந்திரக் கட்சியை கூறுபோடும் நாடகமாகவே இதனை நாம் பார்க்கின்றோம். இந்தச் சதி வலையில் சுதந்திரக்கட்சி ஒருபோதும் சிக்கிக் கொள்ளமாட்டாது.

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பில் 16பேர் அணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதத்திரக் கூட்டமைப்புக்கு யோசனை முன்வைத்தது. ஆனால், அதனை சுதந்திரக்கட்சித்தரப்பு முற்றாக நிராகரித்தது. அதன்பின்னரே 16 பேரும் அரசியலிலிருந்து வெளியேறினர். சுதந்திரக்கட்சிக்கு இடைக்கால அரசு அமைப்பதற்கான எந்த எண்ணமும் கிடையாது. 2020 வரை இந்த நல்லாட்சியை முன்னெடுத்து செல்வதில் கட்சி உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. அரசிலிருந்து வெளியேறிய எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்ட சிலர் மஹிந்தவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைப்பதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்துவருகின்றனர். மஹிந்த – மைத்திரிபால சிறிசேன உறவு எப்போதோ முறிந்து போனதொன்றாகும். ஜனாதிபதிக்கு மஹிந்தவுடன் இணைய வேண்டிய தேவை எதுவும் கிடையாது.

நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்த வண்ணம் நல்லாட்சி அரசு பயணித்துக் கொண்டிருக்கின்றது. அரசு முன்னெடுத்துவரும் நல்ல பணிகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து சேறு பூசும் கலாசாரத்தையே 16 பேர் அணியும் பொதுஜன பெரமுனவும் மேற்கொண்டு வருகின்றன. சில ஊடகங்கள் கூட இதனை ஊதிப்பெருப்பித்து வருகின்றன.

ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியை மாற்றுவது குறித்து சிந்திக்கவுமில்லை. கருத்துக்களை வெளியிடவுமில்லை. அரசாங்கத்தைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதிலேயே அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.

பதவிக்காலம் முடியும் வரை நல்லாட்சி அரசு தொடர்ந்து பயணிக்கும். 2020இல் வரக்கூடிய தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும்.

அதற்கு இன்னும் காலமிருக்கின்றது. கட்சி இது விடயத்தில் அவசரம் காட்ட முற்படவில்லை.

அவர்களுடன் கூட்டுச்சேர்வதால் என்ன நடக்கும் என்பதை நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

16 பேர் அணியின் உடனிருந்து கழுத்தறுக்கும் சதி நாடகத்துக்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் துணைபோக மாட்டாது என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.