கனடிய அதிகாரியுடன் நிசாம் காரியப்பர், உதுமா லெப்பை பேசியது என்ன...?
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன. முக்கியமாக, தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டங்களைக் கொண்டுவருவது பற்றியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம் (Organized Crime Act) ஆகியவை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கவலை தெரிவித்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாக நடத்தாமல் இழுத்தடிப்பது குறித்தும் சுட்டிக்காட்டினார். தற்போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தான் ஒரு உறுப்பினராக இருந்தபோதிலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் விவரித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய இரண்டு முக்கியமான நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். முதலாவது சாம்பு களப்பு நீர்ப்பாசனத் திட்டம், அடுத்தது ஹெட் ஒய நீர்ப்பாசனத் திட்டம் ஆகும். இவை அப்பகுதியில் வாழும் மக்களின் அன்றாட விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் மிகவும் அத்தியாவசியமான திட்டங்கள் எனக் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், இத்திட்டங்களுக்கான உதவிகளைச் செய்து தருமாறு கனடா அரசாங்கத்திடம் கோருமாறு உயர்ஸ்தானிகரிடம் அவர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட கனடியப் பிரதிநிதி, அரசாங்கத்தின் உரிய அமைச்சர்களைச் சந்திக்கும் போது இது குறித்துக் கவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்தார்.

Post a Comment