நாமலுக்கு சென்ற ரகசியக் கடிதம்



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவரது செயலாளர் ஒருவரால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கடிதத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து விடயங்களும் இதுவரை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.


எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு தனது மகனுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


2010ஆம் ஆண்டு நாமல் அரசியலில் பிரவேசித்தபோது, சிறைக்குச் செல்லவும் துன்பங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தால் மட்டுமே அரசியலில் ஈடுபட அனுமதிப்பதாகத் தான் கூறியதை முன்னாள் ஜனாதிபதி அக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், தான் அரசியலில் பிரவேசித்த ஆரம்பக் காலத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.


இந்தக் கடிதத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, நாமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.