Header Ads



சாலிய பீரிஸ் எச்சரிக்கை


அரசாங்கம் புதிதாகக் கொண்டுவரவுள்ள 'சட்டவிரோதக் குழுக்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டமூலம்' தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சாலிய பீரிஸ் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிக்க, அவரது தலைமுடி வடிவமைப்பு (Hairstyle), பச்சை குத்துதல் (Tattoos), ஆடை முறை அல்லது கை சமிக்ஞைகளைக் நீதிமன்றம் அல்லது பொலிஸ் கருத்தில் கொள்ள இந்த சட்டமூலத்தின் பிரிவு வழிவகுக்கிறது.


இதனால், தோற்றத்தைக் காரணம் காட்டி பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்படும் ஆபத்து உள்ளது.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் (PSTA) பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்படும் வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்ட போதிலும், இந்த 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்தின்' மூலம் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் (ASP) அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியமாகப் பயன்படுத்த மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இது பொலிஸ் சித்திரவதைக் கலாசாரத்தை மீண்டும் ஊக்குவிக்கும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு மேல்நீதிமன்றம் (High Court) மூலமாக மட்டுமே பிணை பெற முடியும்.


போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலைகளிலும் கூட நீதவான்கள் அவர்களை விளக்கமறியலில் வைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சீர்திருத்துவதாக உறுதியளித்துவிட்டு, மற்றொரு சட்டத்தின் மூலம் அதே கடுமையான அடக்குமுறைப் பிரிவுகளை மீண்டும் கொண்டுவருவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சியாக அமையுமா என சாலிய பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளாார்.


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்குப் பதிலாக, பொலிஸார் இந்த 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்தை'ப் பயன்படுத்தி மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.