மாலைதீவில் அநியாயமாக சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் - தற்போது குற்றமற்றவர் என விடுவிப்பு


இரண்டு கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத்தை நாட்டிற்குள் கடத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக ஏற்கனவே ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருந்த இலங்கைச் பிரஜை ஒருவரை மாலைதீவு உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.


மாலைதீவுகளுக்குள் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக, குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2025 அக்டோபர் 28 அன்று தண்டனை விதித்து தீர்ப்பளித்த சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, நேற்று (28.10.2026) அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.


2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் மாலைதீவு வெலனா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முஹம்மட் சுலைமான் என்ற இலங்கையர், தனது ஆடைக்குள் 2,282 கிராம் தங்கப் பசையை மறைத்து வைத்திருந்ததாக மாலைதீவு சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.


மாலைதீவு சுங்கச் சட்டத்தின் பிரிவு 97(a) இன் கீழ் பதியப்பட்ட, இந்தக் குற்றச்சாட்டு, 'கடத்தல்' என்ற சட்டப்பூர்வ வரையறைக்குப் பொருந்தாது என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.


குறித்த தங்கம் தடைசெய்யப்பட்ட பொருளோ அல்லது சுங்க வரி விதிக்கப்படும் பொருளோ அல்ல என்பதை அரச தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.


சட்டம் ஒரு செயலைக் குற்றம் என்று தெளிவாக வரையறுக்காத வரை அதை குற்றவியல் நடவடிக்கையாகக் கருத முடியாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.


கீழ் நீதிமன்றத்தின் தண்டனை அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது எனக் கூறி, அவர் ஏற்கனவே தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையிலும் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தது.

No comments

Powered by Blogger.