ஞானசாரருக்கான பேரணியில், பிக்குகளின் நாடகம் அம்பலம்
நேற்று (14) யக்கல, வீதியவத்தையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தனிப்பட்ட தேவைக்காக லொறி ஒன்றில் பயணித்த ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக முரண்பாடு முற்றியதால் ஏற்பட்டதாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் நடைபயண பேரணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்புவது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து அவசியமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட விளக்கத்தின் முழு விவரம்:
சிறையில் உள்ள தேரர் ஒருவருக்காக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நடைபயண பேரணிக்கு ஆதரவளித்தவர் மீது சில தரப்பினரால் தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டுள்ளதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரரால் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இச்சம்பவம் 2026.10.14 அன்று வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், காணொளியில் உள்ள தாக்குதலுக்குள்ளான நபர் வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீரகுல பொலிஸ் நிலையம் மூலம் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், அதற்கமைய வீதியவத்தையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது தாக்குதலுக்குள்ளான நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டதாகவும், அப்போது தேரர் ஒருவர் காணொளியில் சம்பவம் குறித்து விசாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலுக்குள்ளான நபர் நடைபயண பேரணியுடன் தொடர்புடைய நபர் அல்லவென்றும், அவர் தனிப்பட்ட தேவைக்காக லொறியில் பயணிக்கும்போது போக்குவரத்து நெரிசலின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கூறிய தேரரால், தாக்குதலுக்குள்ளான நபரின் காயங்களைக் காட்டி தம்முடன் வந்த ஆதரவாளர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு காணொளியொன்றைப் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் வெளியிடப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவும் இக்காணொளி தொடர்பில் வீரகுல பொலிஸ் நிலையம் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இது போன்ற பொய்யான, உறுதிப்படுத்தப்படாத, பொதுமக்களின் அமைதியின்மை மற்றும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான இவ்வாறான சம்பவங்கள் மற்றும் பதிவுகள் தொடர்பில் இலங்கைப் பொலிஸார் கடுமையான கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கச் செயற்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான முறையில் பொய்யான தகவல்களை வெளியிடும் காணொளி தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொள்வதுடன், வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment