NPP யின் 159 எம்.பி.க்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு - இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு
(க.சிவலிங்கமூர்த்தி)
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 159 உறுப்பினர்களும் தமக்கு அரசினால் வழங்கப்படும் சம்பளம், அலுவலக பராமரிப்பு மற்றும் எரிபொருட்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் மக்கள் நலனுக்காக நேரடியாகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தையிலுள்ள தலைமை அலுவலக வங்கிக் கணக்குக்குத் தொடர்ச்சியாக மாற்றி வைப்புச் செய்வதன் மூலம் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றத்தைச் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அவர்களுக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர எழுத்து மையத்தின் நிறைவேற்று அதிகாரியும் 'தினன தகுண' அமைப்பின் பிரதிநிதியுமான தர்சன தந்த்ரிகே தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் இம்முறைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக கையளித்த பின்னர் புதன்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,City & Local Guides
இலங்கை அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற விதமுறைகளின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளத்துக்கு மேலதிகமாக, தொகுதி மக்களுடனான தொடர்பைப் பேணவும் அலுவலகங்களைப் பராமரிக்கவும் மாதத்துக்குச் சுமார் 100,000 ரூபாயும், தொலைபேசிகளுக்குச் சுமார் 50,000 ரூபாயும், அத்துடன் எரிபொருள் கொடுப்பனவு, அமர்வுப் படிகள் (அமர்வு ஒன்றுக்கு ரூ. 2,500) மற்றும் சாரதிகளுக்கான நிதி என மக்கள் பணத்திலிருந்து சட்டப்பூர்வமாக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியானது மக்கள் பிரதிநிதிகள் தமது தேர்தல் தொகுதி மக்களுக்குச் திறம்படச் சேவையாற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அனைவரும் தமது 100 சதவீதக் கொடுப்பனவுகளையும் முறைமை சார்ந்த அடிப்படையில் கட்சியின் தலைமை வங்கிக் கணக்குக்கு மாற்றுவதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு அரச நிதியைக் கட்சி நிதியத்துக்கு மாற்றுவதற்குச் சட்டத்தில் எவ்வித அனுமதியும் இல்லை என்பதால், இது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளுக்கு அமைவாக அரச அதிகாரத்தையும் பொது நிதியையும் துஷ்பிரயோகம் செய்து கட்சிக்குச் சட்டவிரோத நிதி நன்மைகளைப் பெற்றுக்கொடுத்த குற்றத்தின்கீழ் வருகின்றது.
மேலும், திசாநாயக அன்ட் கோ கணக்காய்வு நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட 2025.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியறிக்கைகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் கணக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மூலம் 215,316,076.78 ரூபாயும், மக்கள் விடுதலை முன்னணியின் கணக்கில் உறுப்பினர்களின் ஓய்வூதியம் மூலம் 816,347.64 ரூபாயும் வரவு வைக்கப்பட்டுள்ளது.South Asians & Diaspora
இச்சம்பவத்தில் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக ஆணைக்குழுவிற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், உறுப்பினர்களின் தனிப்பட்ட வங்கி அறிக்கைகள் மற்றும் கட்சியின் வங்கி அறிக்கைகளை உடனடியாக அழைத்துப் பரிசீலிக்க வேண்டும்.
அரச நிதியைச் சட்டவிரோதமாகக் கட்சி கணக்குக்குத் திருப்பியதன் மூலம் இடம்பெற்ற நம்பிக்கையீனங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அப் பணத்தை மீண்டும் அரசுக்கு மீட்டுத் தருமாறும் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக ஐந்துகட்டக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment