சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபுவின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
- Vijith Kumar -
“என் மகன் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலை செய்ய மாட்டான்… அவனை ஏமாற்றியவன் அனுபவித்துத்தான் சாக வேண்டும்”
சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அபுவின் தாய் கதறி அழுது கண்ணீர் மல்க பேட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதியில் கண்ணூர் மாஹி பகுதியைச் சேர்ந்த அபுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் வழக்கில்தான் அபுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓமனில் இருந்து சவுதிக்கு செல்லும் வழியில் நடைபெற்ற எல்லைப் பரிசோதனையின்போது, மாஹி பெருங்காடி பகுதியைச் சேர்ந்த அபு வெள்ளையில் என்பவரை சவுதி போலீசார் கைது செய்தனர்.
அபு சென்ற வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளில் ஒன்றில் சுமார் 43 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அபுவை சவுதி போலீசார் கைது செய்தனர்.
ஓமனில் அபுவின் விசா காலாவதியான நிலையில், அவரது விசாவை சரிசெய்து தருவதாகக் கூறி நண்பர் ஒருவர் முன்வந்ததாகவும், அந்த நண்பரின் ஏமாற்றத்தில்தான் அபு சிக்கிக் கொண்டதாகவும் அவரது தாய் ஷாஹிதா தெரிவித்துள்ளார்.
நண்பர் கூறியதன் பேரில்தான் அபு வாகனத்துடன் சவுதிக்கு செல்ல சம்மதித்ததாகவும், சவுதிக்கு சென்ற பிறகு தாயகம் திரும்பலாம் என்றும், விசாவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், பின்னர் அந்த வாகனத்தை நண்பரே வந்து எடுத்துச் செல்வார் என்றும் கூறியதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பித்தான் அபு வாகனத்துடன் சவுதிக்கு சென்றதாக அவரது தாய் ஷாஹிதா கூறியுள்ளார்.
“எனக்கு ஒரே ஆதரவாக இருந்தவன் அவன்தான். அவன் ஒருபோதும் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டான்” என்று கூறி அபுவின் தாய் கதறி அழுதார்.
“என் மகனுக்கு இந்த துரோகத்தை செய்தவன் அனுபவித்துத்தான் சாக வேண்டும்” என்றும் தாய் ஷாஹிதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அபு நிரபராதி என்பதை நிரூபிக்க உதவுமாறு அவரது தாய், மனைவி மற்றும் சகோதரிகள் சவுதியில் உள்ள இந்திய தூதரிடம் கருணை மனு அளித்திருந்தனர். ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதியில் அபுவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Post a Comment