தம்பியை படிக்க வைக்க ஆசைப்பட்ட மூத்தவன் - 2 பேருமே குண்டுக்கு பலியான சோகம்
முச்சக்கர வண்டி சாரதியான நலின் அவருடைய மனைவியை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மூத்தமகன் O/L பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார், தம்பி எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் தரையில் ஒரு பாயில் உறங்கச் சென்றிருந்தனர். சுமார் 3.15 மணியளவில், வீட்டின் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு நலின் கதவைத் திறக்கச் சென்றபோது, கதவருகே இருந்த ஒருவர் வீட்டிற்குள் ஒரு கையெறி குண்டை வீசினார்.
அதன் பின்னர் அந்த நபர் உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது மற்றொரு கூட்டாளியுடன் வெளியே ஒரு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார். வீட்டிற்குள் கையெறி குண்டு வெடித்ததில் நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை நலின் இரு கால்களிலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்த கசுன் ரஸ்மகா, வீட்டில் நிலவிய கடுமையான வறுமையின் காரணமாக தனது உயர்நிலை படிப்பைத் தொடர பாடசாலைக்குச் செல்லவில்லை. அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேரத் தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, என் அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல், எனக்கும் என் தம்பிக்கும் உணவும் நீரும் வழங்கவும், பாடசாலைக்கு எங்களை அனுப்பவும் அப்பா கடுமையாகப் போராடி வருகிறார். அதனால், என்னால் உயர்நிலை படிப்புக்குச் செல்ல வழியில்லை. வகுப்புகளுக்குச் செல்ல என்னிடம் பணமும் இல்லை.
எனவே, நான் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன். நான் என் வேலையைச் செய்வேன், என் தம்பிக்கு நன்றாகக் கற்பித்து அவனை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவேன் என அவருடைய நண்பர்களிடம் கசுன் கூறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment