Header Ads



நேபாள மண்சரிவு - இலங்கைக்கும் எச்சரிக்கை


நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980 களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.


ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்

இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என எச்சரித்த அவர், டித்வா சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர் தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும் பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. 


எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள் அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.