Header Ads



விகாராதிபதியின் இரட்டை வேடம், மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்


கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.


விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது. ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார்.


தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.


சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.


அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.


ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.


மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.


பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார்.


அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.


இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.