Header Ads



சவூதி நிதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் - இலங்கைத் தாதுவர் அமீர் அஜ்வத் வழங்கிய தகவல்கள்



சவூதி அரேபியாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை திறந்து வைக்கப்படுகிறது.


சாவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சபரகமுவ பல்கலைக்கழகத்துக்கான மருத்துவ பீடம் நாளை சனிக்கிழமை, ஜூலை 4ம் திகதி வைபவரீதியாக திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தாதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான மாண்புமிகு டாக்டர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.


சவூதி அபிவிருத்தி நிதியம் (Saudi Fund for Development – SFD) சார்பில், அதன் துணை தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஃபைசல் முகம்மது எச். அல்-கஹ்தானி தலைமையிலான உயர்மட்டக் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இக்குழுவில் ஆசிய நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் டாக்டர் சவுத் அயித் ஆர். அல்-ஷம்மரி, நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ராபி ஹெசாப் டி. அல்-சஆதூன், மற்றும் மூத்த நெறிமுறை நிபுணர் திரு. முகம்மது சுலைமான் எம். அல்-குவைஃப்லி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்.


சவூதி அபிவிருத்தி நிதியம், சவூதி அரேபியாவின் சர்வதேச அபிவிருத்தி நிதி வழங்கும் நிறுவனம், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்தித் திட்டத்திற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (187.5 மில்லியன் சவூதி ரியால்கள்) வழங்கியுள்ளதாக தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார். கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதிக்குள் சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட இரண்டாவது கல்வி அபிவிருத்திக்கான முக்கிய திட்டமாக இது திகழ்கிறது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு (2025) ஜூலை 14 அன்று 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டமும் திறந்து வைக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது. 


சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்தித் திட்டம் கட்டிடங்களை அமைப்பதற்கான முதலீடு மட்டுமல்ல; அது மனித வளம், சுகாதாரம், கல்வி, பிராந்திய அபிவிருத்தி மற்றும் முழு சப்ரகமுவ மாகாணத்தினதும் இலங்கையினதும் எதிர்கால அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட முதலீடாகும் என இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மேலும் குறிப்பிட்டார்.


இந்த நவீன மருத்துவ பீடத் திட்டம் இரண்டு முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரதான வளாகத்தில் கல்வி, நிர்வாக மற்றும் ஆதரவு வசதிகளுக்கான 13 சிறப்பு கட்டிடங்கள், 500 மாணவர்களுக்கான விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், நவீன நூலகம் மற்றும் 1,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் G+8 மாடிக் கட்டிடமாக professional unit நிறுவப்பட்டு, நவீன ஆய்வுகூடங்களுடன் மருத்துவக் கற்பித்தல், பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் பத்தாவது மருத்துவ பீடமாக அமையும் இத்திட்டம், மருத்துவக் கல்வியை கொழும்பு மற்றும் பாரம்பரிய பல்கலைக்கழக மையங்களுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்துவதோடு, மேலும் பல தகுதியான மாணவர்கள் நாட்டிலேயே மருத்துவக் கல்வியைப் பெறும் வாய்ப்பை உருவாக்கும். அதேவேளை நாட்டில் நிலவும் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் இது பெரும் பங்களிப்பை வழங்கும் என தூதுவர் அமீர் அஜ்வத் வலியுறுத்தினார்.

இதுவரை சவூதி அபிவிருத்தி நிதியம் இலங்கையில் 15 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுமார் 438 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (1.5 பில்லியன் சவூதி ரியால்கள்) சலுகை நிதியுதவியை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவற்றில் கொழும்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டம், இலங்கையின் மிக நீளமான கிண்ணியா பாலம், தேசிய வைத்தியசாலையின் நியூரோ-ட்ரோமா பிரிவு, களு கங்கை அபிவிருத்தித் திட்டம், வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் பேராதனை–பதுளை–செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டம் ஆகியவை அடங்கும். இத்திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.


இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், நடைமுறையில் இருந்த திட்டங்களுக்கு இடையறாது நிதி வழங்கிய ஒரே இருதரப்பு அபிவிருத்தி நிதி நிறுவனம் சவூதி அபிவிருத்தி நிதியமே என்றும் தூதுவர் குறிப்பிட்டார். மேலும், 2025 ஜூலை மாதம் கொழும்பில் சவூதி அரேபியாவும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான சவூதி அரேபியாவின் தொடர்ந்த ஆதரவின் சான்றாகும் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.


இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கிவரும் உறுதியான ஆதரவிற்காக, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கும், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.


மேலும், சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேதகு சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாத், துணை தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஃபைசல் முகம்மது எச். அல்-கஹ்தானி, ஆசிய நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் டாக்டர் சவுத் அயித் ஆர். அல்-ஷம்மரி, மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூத்த அதிகாரிகள் அனைவருக்கும், இலங்கையில் நிலையான அபிவிருத்தியை முன்னேற்றுவதற்காக பல ஆண்டுகளாக வழங்கிவரும் அர்ப்பணிப்பும் அளப்பரிய ஒத்துழைப்பும் குறித்து அவர் தனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.