சஜித், ரணில், நாமல் பதற்றமடைவது ஏன்..?
ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவது தற்போதைய அரசுக்கு எந்தவிதமான சவாலையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தப்போவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
"முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல் பிரிந்து சென்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும் சாதித்துவிட முடியாது. இதனை ஒரு சமமான அரசியல் கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.
கடந்த வியாழக்கிழமை இருவரும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்தபோது, ரணில் விக்ரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாஸ அவற்றை அமைதியாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தன்னைத் தலைவராகக் காட்டியுள்ளார். இதன் மூலம் சஜித் பிரேமதாஸவை இரண்டாம் இடத்துக்கும் கீழே அவர் தள்ளிவிட்டார்.
மேலும், ரணில் - சஜித் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே இருக்கின்றார்கள்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்களும் குற்றப் பின்னணிகளும் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில் மற்றும் நாமல் உள்ளிட்டோர் பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment